புற்று நோய் பாதிப்பிலிருந்து மனிஷா கொய்ராலா மீண்ட கதை!

#Actress
Prasu
3 years ago
புற்று நோய் பாதிப்பிலிருந்து மனிஷா கொய்ராலா மீண்ட கதை!

இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா?

2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா ஒரு நிமிடம் திணறிப் போனார். எதிர்காலம் மீதும் வாழும் நாள்கள் மீதும் பெரும் பயம் ஏற்பட்டன.

பயம் தெளிந்தவுடன் தீர்வு என்ன என்று யோசித்தார். புற்றுநோயைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேரடியாக எதிர்கொள்ள ஆயத்தமானார். முட்டி மோதுவோம், என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்கிற மனநிலைக்கு மாறினார்.

உடனடியாக அமெரிக்காவுக்குச் சென்றார். ஒரு வருடம், மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். அடுத்த ஆறு மாதங்களுக்கு 18 பகுதிகளாக கீமோதெரபி சிகிச்சை அவருக்கு நடைபெற்றது.

பணம் தண்ணீராகச் செலவானது. வலிகள், போராட்டங்கள் அதிகமாகின. மனத்தளவில் நம்பிக்கையில்லை, உடல் உதவி செய்யவில்லை, சக்தி முழுவதையும் இழந்தது போல உணர்ந்த நிலையில் அவருடைய குடும்பம் பெரிய பலமாக இருந்திருக்கிறது. அதன் கையைப் பிடித்துக்கொண்டே புற்றுநோயை தன் உடலில் இருந்து விரட்டி அடித்துள்ளார்.

நேபாளத்தில் பிறந்தவர் மனிஷா கொய்ராலா. 1950களின் இறுதியில் இவருடைய தாத்தா, நேபாளத்தின் பிரதமராகப் பணியாற்றியவர். சிறுவயதில் இந்தியாவின் வாரணாசியில் உள்ள தன் பாட்டியின் வீட்டில் வளர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்துவிட்டு பிறகு தில்லி, மும்பையில் வாழ்ந்துள்ளார். 1989-ல் ஒரு நேபாளப் படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். தில்லியில் ராணுவப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது மாடலிங் வாய்ப்புகள் வந்துள்ளன. கேமரா முன்னால் நின்றபிறகு நடிப்பு ஆசை வந்துள்ளது. உடனே மும்பைக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.

சுபாஷ் கையின் செளதாகர் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. 1994-ல் வெளியான விது வினோத் சோப்ராவின் 1942: ஏ லவ் ஸ்டோரி படமும் அதன் அழகான பாடல்களும் மனிஷாவை இந்தியா முழுக்கப் பிரபலமாக்கின. ஒரே நாளில் நம்பமுடியாத புகழை அடைந்தார்.

உடனடியாக மணி ரத்னத்தின் பம்பாய் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்ப் படம் என்பதால் சில தயக்கங்களுக்குப் பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த இரு படங்களும் இவரை நட்சத்திரமாக்கின. இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் எனத் தமிழ்ப் படங்களில் அடிக்கடி இவரைப் பார்க்க முடிந்தது.

வயிற்றில் சில உபாதைகள் ஏற்பட்டன. அதை புற்றுநோய் என அவர் நினைக்கவில்லை. கேஸ், அசிடிட்டி என எண்ணிக்கொண்டார். புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் மருத்துவர்களையும் அவர் நாடவில்லை. இதனால் தான் இன்று இதைப் பற்றி நிறைய பேசுகிறார் மனிஷா. அறிகுறிகள் தென்பட்டால், அசாதாரண நிலை இருந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்கிறார். மேற்குலகில் இதுபற்றிய விழிப்புணர்வு உள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்துபார்த்துக் கண்டுபிடிப்பதால் அங்கு புற்றுநோயால் இறப்பவர்கள் குறைவு. நம் ஊரில் 2-ம், 3-ம், 4-ம் நிலைகளில்தான் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் சிகிச்சையின் செலவு அதிகமாவதோடு நோயாளிகளுக்கு ஏற்படும் வலியும் மிக அதிகமாக இருக்கும். சிகிச்சையும் பலன் அளிக்காமல் போக வாய்ப்புண்டு. இதனால் தான் எங்கு சென்றாலும் புற்றுநோய் பற்றி பேசுகிறேன் என்கிறார்.

சிகிச்சைக்காக சென்ற நியூயார்க்கில் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தால் கூட அது மனிஷாவுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த இயற்கை உலகத்தை ஏன் இத்தனை நாளாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம் என வருந்தினார்.

எனக்குப் புற்றுநோய் என்று தெரிந்தவுடன் மும்பையின் 80% பார்ட்டி நண்பர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்கிறார் மனிஷா. 10 வருடங்களாக என் உடலை துன்புறுத்தியுள்ளேன். ஆரம்பத்தில் மும்பையின் சினிமா வாழ்க்கை என்னை அச்சுறுத்தியது. யாரிடம் எப்படிப் பேசுவது, பழகுவது என்று தெரியாமல் இருந்தேன். அதன்பிறகு ஒரு வருடத்துக்கு 12 படங்களில் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பான நடிகையாக மாறினேன். ஓய்வே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு ஞாயிறு கிடையாது. இயற்கை ரசித்துப் பார்க்கவும் நேரமில்லை. கவனத்தைத் திசை திருப்புவதற்காக மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அது எனக்குத் தன்னம்பிக்கையை அளித்தது. என் தயக்கத்தைக் களைந்ததால் அதை மேலும் மேலும் நாடினேன். பார்ட்டிகள் என் வாழ்க்கையில் முக்கியப் பகுதிகளாகின. என் வீட்டில் பார்ட்டி நடக்கும். அல்லது நான் பார்ட்டிக்குச் செல்வேன். புற்றுநோய் இல்லாவிட்டால் வேறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பேன். புற்றுநோய் என் தவறுகளைக் காட்டியது. என்னைக் கூர்மையாக்கியது. இன்று என் வசம் உள்ள உறவினர்களும் நண்பர்களும் உண்மையானவர்கள். நீண்ட நாள் நீடிக்கும் நட்பு அவை என்கிறார்.

புற்றுநோய் வந்த பிறகு இயற்கையைக் காதலிக்க ஆரம்பித்தார். டியர் மாயா (2017) படப்பிடிப்பு சிம்லாவிடம் நடைபெற்றபோது வழிகாட்டியுடன் இணைந்து காட்டில் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். ஏரியோரம் அமர்ந்து நூல்கள் வாசித்தார். சூரிய உதயம், அஸ்தமனத்தைக் கவனித்தார். வானம், பறவைகளைப் பார்க்க நேரம் ஒதுக்கினார். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை ருசிக்கவேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக்கொண்டார். மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை அடைந்துள்ளார். உடலுக்கு எது நல்லதோ அதை மட்டுமே உட்கொள்கிறார்.

2014 மத்தியில் புற்றுநோயிலிருந்து மீண்டார் மனிஷா. மறுபிறப்பு வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருகிறார். அர்த்தமுள்ளதாகவும் அதே சமயத்தில் நாலு பேருக்கு உதவும் விதத்திலும் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். தன்னுடைய பிரபலத்தை புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தி வருகிறார். புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்குத் தன்னம்பிக்கை அளித்து, தன் வாழ்வின் ஒரு பகுதியை புற்றுநோய் விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது நாளை உயிருடன் இருப்போமா என்று கூடத் தெரியாது. நாலு பேர் நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசுவார்களா என்று பார்த்தால் புற்றுநோயால் கிடைத்த இன்னல்களை யாரும் பகிர்ந்துகொள்வதாக இல்லை. அப்போதுதான் முடிவெடுத்தேன். என் நிலை இன்னொருவருக்கு வரக்கூடாது. நான் இதிலிருந்து மீண்டு வரவேண்டும். அந்தப் பாடத்தை எல்லோருக்கும் சொல்லவேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன் என்கிறார்.

அரசு மட்டும் புற்றுநோயிலிருந்து மக்களைக் காக்க முடியாது. தனியார் நிறுவனங்களும் இதில் பங்களிக்க வேண்டும். சிலவகை கீமோதெரபி சிகிச்சைகளுக்குச் செலவு மிக அதிகம் ஆகும். அது எல்லோருக்கும் கிடைக்கும் விதத்தில் மருந்து நிறுவனங்களிடம் நாம் பேசவேண்டும். பரிசோதனை மையங்கள் கிராமங்களிலும் இருக்கவேண்டும் என்கிறார்.

புற்றுநோயால் மீண்ட பிறகும் நிம்மதியாக அவரால் மூச்சுவிட முடியவில்லை. அடுத்த மூன்று வருடங்களில் மீண்டும் தோன்றலாம் என எச்சரிக்கை அளித்துள்ளார் மருத்துவர். இதனால் எப்போதும் விழிப்புணர்வுடன் தன் வாழ்க்கையை அணுகிறார். சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படமான சஞ்சுவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நர்கீஸ் தத் வேடத்தில் நடித்தார். 2012-க்குப் பிறகு ஐந்து வருடங்கள் எந்தப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.

ரச்னா சாச்சியுடன் இணைந்து ஹீல்ட் என்கிற தனது சுயசரிதையை எழுதியுள்ளார் மனிஷா கொய்ராலா. பாலிவுட் வாழ்க்கையில் ஆரம்பித்து புற்றுநோயிலிருந்து மீண்டது வரை தனக்கு ஏற்பட்ட அனைத்து அனுபவங்களையும் வெளிப்படையாக எழுதியுள்ளார். புற்றுநோய் உண்டானபோது மேற்கொண்ட சிகிச்சைகள், வாழ்க்கைமுறை, அப்போதைய மனநிலை என அனைத்தையும் ஒரு நாட்குறிப்பில் எழுதி வந்தார். அதன் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

நியூயார்க் மருத்துவமனை வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியத்தை நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருநாள் செவிலியரை அழைத்துப் பார்த்துள்ளார் மனிஷா. பதிலே இல்லை. தாமதமாக வந்த செவிலியரிடம், பாலிவுட் என்றால் என்ன என்று தெரியுமா கேட்டுள்ளார். ஆடல், பாடல்கள் கொண்ட படங்களை வெளியிடும் திரையுலகம் தானே, எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பதில் கூறியுள்ளார் செவிலியர். அங்கு நான் ஒரு பெரிய நடிகை தெரியுமா, பாலிவுட்டில் 80 படங்களில் நடித்துள்ளேன் என மனிஷா சொல்ல, செவிலியர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளார். அதன்பிறகு கவனிப்பு அதிகமானது. என் கையில் டிவி ரிமோட்டைக் கொடுத்துவிட்டார் என்கிறார் மனிஷா. பாலிவுட் வாழ்க்கையைச் சொல்லச் சொல்ல மனிஷா மீது செவிலியர்களுக்குப் பரிதாபமும் பிரமிப்பும் ஏற்பட்டுள்ளன. அதிலிருந்து அவர்களும் தங்கள் கதையை மனிஷாவிடம் பகிர்ந்துள்ளார்கள். நோயாளி - செவிலியர் உறவிலிருந்து ஒரு பெண், இன்னொரு பெண்ணிடம் சொந்தக் கதையைச் சொல்லும் அளவுக்கு முன்னேறியது எங்கள் உறவு என்கிறார் மனிஷா.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!