இன்றைய வேத வசனம் 26.9.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
நாம் உண்ணும் பழங்கள், தானியங்கள், போன்ற உணவில் பலவிதமான சர்க்கரை உள்ளது.
ஆனால் நாம் பார்க்கவிருக்கும் இனிமையான எதிரி உணவிலும், பானங்களிலும் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற மாவு சத்துகளாகும்.
இந்திய இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வுகளின் படி, இக்கால தலைமுறையினர் சராசரி அளவை விட மூன்று மடங்கு அதிகமான சர்க்கரை பயன்படுத்துகின்றனர்.
2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 12 முதல் 19 வயது வரை உள்ளவர்களில் நான்கில் ஒருவர் உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள்.
ஏன் இந்த சர்க்கரை ஒரு இனிமையான எதிரி?
நீங்கள் ஒரு மிட்டாய் தின்றதும் அதிலுள்ள சர்க்கரை உடனடியாக குளுக்கோஸாக ரத்தத்தில் கலக்கிறது.
எனவே உங்கள் ரத்தத்திலுள்ள குளுக்கோசை செல்களுக்கு அனுப்பி சக்தியை தர அல்லது கொழுப்பாக சேமித்து வைக்க உங்களது கணையம் இன்சுலின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது.
இது இரத்த சர்க்கரை அளவை உடனே ஏற்றி இறக்குகிறது. ஆகவே இனிப்பினால் கிடைத்த புத்துணர்ச்சி குறுகிய நேரத்தில் சோர்வாக மாறி, மீண்டும் பசியைத் தூண்டுகிறது. ஒரு சிறிய மிட்டாய் எப்படி மோசமான உணவு பழக்கத்திற்கு காரணமாகிறது பார்த்தீர்களா?
இனிப்புகள் பிடிக்காது என்று சொல்லுபவர்களா நீங்கள்?
சமோசா, வடை, சிப்ஸ், மற்றும் Fastfood என்று அடித்து நொறுக்குபவர்களாக இருக்கலாம். இது போன்ற உணவுகளும் ரத்தத்தின் சர்க்கரை அளவை ஏற்றி இறக்குவதில் சளைத்தது அல்ல.
அதிக சர்க்கரை மற்றும் நொறுக்கு தீனிகள் உங்கள் உடலை பருமனாக்கி, பல்வேறு வேண்டாத ஹார்மோன் மாற்றங்களை ஏற்படச் செய்கிறது.
உடல் பருமன் பிற்காலத்தில் இருதய நோய், நீரிழிவு (type 2 diabetes) மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆதாரமாகிறது.
இனிமையான எதிரியை வசப்படுத்துவது எப்படி?
ஆகவே உங்கள் நாவின் சுவை அரும்புகளை பழக்குவியுங்கள்!
உணவிற்கு பின்பு இனிப்பு சாப்பிடுபவராக இருந்தால் அதை முதல் வாரத்தில் தவிர்த்திடுங்கள்.
இனிப்புகள், குளிர்பானங்கள், பழச்சாறுக்கு பதிலாக பழங்களை உண்ணுங்கள்.
புரதம் அதிகம் நிறைந்த மீன், முட்டை, இறைச்சி, பயிறு, பருப்புகள், நார் சத்து நிறைந்த காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிட்டால், நீண்ட நேரம் இனிப்புகள் இல்லாமல் செயல்பட முடியும், ஆரோக்கியமானதும் கூட.
தினமும் 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இனிமையான வாழ்விற்கு! ஆரோக்கியமானதை சாப்பிடுங்கள்!
நம் தேவனுடைய ஆலயமாகிய நம்முடைய சரீரத்தை ஆரோக்கியமாக காத்துக் கொள்வது நமது தலையாய கடமை! ஆமென்!!
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். கொரிந்தியர் 6:19,20
ஆமென்!