பேஷன் மாமன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணமும்! நீடிக்கும் மர்மமும்!

Keerthi
2 years ago
பேஷன் மாமன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணமும்! நீடிக்கும் மர்மமும்!

20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் மைக்கேல் ஜாக்சன். இசை, நடனம், பேஷன் மூலம் மக்களை என்டர்டெயின் செய்த மாமன்னன் என்று கூட மைக்கேல் ஜாக்சனை சொல்லலாம். "மூன் வாக் மூவ்மெண்ட்" மூலமாக பார்வையாளர்களை கவர்ந்த இந்த கலைஞனின் வாழ்வில் புகழுக்கு எந்தளவு இடமிருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்தன. அவரது தோற்றத்தில் அவர் மேகொண்ட மாற்றங்கள், வாழ்க்கை முறை மாதிரியான காரணங்களுக்காக அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன.

மத மாற்றம் செய்துக் கொண்டதாக வெளியான தகவல்கள், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு என பலவகைகளில் அவரது வெள்ளை காகிதம் போன்ற புகழில் கருப்பு புள்ளிகள் பதிந்துக் கொண்டே இருந்தன. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு 2000-களில் இவர் பெரிதாக தலைக்காட்டவில்லை. ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மைக்கேல் ஜாக்சன். தனது இசை கச்சேரிக்காக ரிஹர்சல் செய்துவிட்டு வீடு திரும்பி உறங்கியவர் மீண்டும் கண்விழிக்கவே இல்லை. இந்த நாள் பாப் இசை உலகின் கறுப்பு நாளாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கடைசியாக ரிஹர்சல் செய்துக் கொண்டிருந்த போது கூட ஆரோக்கியமாக, நன்கு நடனம் ஆடிக்கொண்டு தானே மைக்கேல் ஜாக்சன் இருந்தார் என்று அவரது குழுவில் நடனமாடுபவர்கள் தெரிவித்திருந்தனர். அவர் எப்படி திடீரென மரணித்தார்? இது இயற்கை மரணமா அல்லது கொலையா? என்ற சந்தேகம் இன்றளவிலும் நிலவி வருகிறது. முதலில், அதிகப்படியான மருந்துகளை கொடுத்து மைக்கேல் ஜாக்சனின் மருத்துவர் Cornad Murray என்பவர் தான் கொலை செய்தார் என்ற சொல்லப்படுகிறது. ஆனால், மருத்துவர் Cornad Murrayவோ மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய இறுதி நாள் அன்று தூங்கமின்மையால் அவதிப்பட்டார் என்றும், மைக்கேல் ஜாக்சன் கேட்டதற்கிணங்கவே Anaesthetic Propofol கொடுத்ததாகவும், ஆனால் அது அவரின் உயிரையே பறித்து விடும் என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மைக்கேல் ஜாக்சனின் மகளான 'பாரிஸ் ஜாக்சன்' தன் தந்தை மைக்கேல் ஜாக்சன் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார். அதேபோல ஜாக்சனின் தங்கையும், தன் அண்ணன் 'ஜாக்சன் பிசினஸ்' காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார். இவ்வற்றிற்கெல்லாம் இன்னும் புத்துயிர் கொடுப்பதுப்போல, Illuminatiகளால் ஜாக்சனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்று 2015-ம் ஆண்டு ஒரு கால் ரெக்கார்டிங் ஒன்று வெளியானது. இதனால் ஜாக்சன் கொலை தான் செய்யப்பட்டிருப்பார் என்று ஊர்ஜிதமாக நம்பப்பட்டது. ஜாக்சன் தன் மரணத்திற்கு முன் எழுதிய கடிதம் என்று ஒன்றை அமெரிக்கா பத்திரிக்கைகளில் ஒன்றான 'தி சன்' வெளியிட்டது. அதில், " என்னை கொலை செய்ய முயல்கிறார்கள்" என்று மைக்கேல் ஜாக்சன் எழுதி இருந்ததாக கூறப்பட்டது.

இப்படி மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டாலும், மற்றொரு புறம் மைக்கேல் ஜாக்சன் உண்மையாகவே இறந்தது 2009 இல்லை 2007-ம் ஆண்டு தான் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2 ஆண்டுகளாக மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்தில் இருந்தது வேறொருவர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மைக்கேல் ஜாக்சன் இறப்பு என்பது கொலையா? இயற்கையான மரணமா? என்ற கோட்பாடுகள் சுற்றும் நிலையில், மைக்கேலின் மரணம் என்பது சித்தரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

மைக்கேல் ஜாக்சனுக்கு 2000-ம் ஆண்டுக்கு பிறகு அதிக நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் கடன் பிரச்சனை அவரை சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த கடன் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக, தான் இறந்துவிட்டது போல் நாடகமாடி வெளிநாட்டிற்கு பறந்துவிட்டதாக சில கோட்பாடுகள் கூறுகின்றன. மைக்கேல் ஜாக்சன் மரணித்துவிட்டார் என்று கூறப்பட்ட அதேநாளில் மைக்கேல் ஜாக்சன் போன்ற ஒருவர் காலிபோர்னியாவில் இருந்து மெக்சிகோவிற்கு செல்வதை எல்லை பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இதனால், மைக்கேல் ஜாக்சன் மரணிக்கவில்லை, தப்பி ஓடியுள்ளார் என்று மற்றும் சில கோட்பாடுகள் கூறுகின்றன. ஏறத்தாழ 12 வருடங்கள் கழிந்த பிறகும், இன்னும் மைக்கல் ஜாக்சனின் மரணம் குறித்த மர்மங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.