சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல இந்தி நடிகர்!
நடிகை சமந்தாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாக்கள், திரையுலக நட்சத்திரங்கள் மீது இந்தி திரையுலகினருக்கு எப்போதுமே ஓர் அலட்சியம் உண்டு.
நாம்தான் இந்திய சினிமாவின் பிரதிநிதிகள் என்ற தவறான புரிதலில் விளைந்த தற்பெருமை அது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு அந்த மமதையில் சற்று அடி விழுந்திருக்கிறது.
இந்திப்பட ரசிகர்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்தியாவில் தயாராகும் திரைப்படங்களை பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிற இந்திப் படங்களுடன் ஒப்பிடுகிறார்கள்.
இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கே தென்னிந்திய திரையுலகினரின் திறமையும், தகுதியும் இப்போதுதான் புலப்பட ஆரம்பித்திருக்கிறது.
தி பேமிலி மேன் வெப் தொடர் வழியாக சமந்தாவின் புகழ் இந்திப்பட ரசிகர்களிடம் நன்றாக சென்று சேர்ந்துள்ளது. அந்தத் தொடரை இயக்கிய ராஜ் & டிகேயே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான்.
இப்போது அவர்களின் இயக்கத்தில் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கிறார். அதேபோல், நானியின் தெலுங்குப் படம் ஜெர்சியின் இந்தி ரீமேக்கிலும் ஷாகித் கபூர் நடித்துள்ளார்.
அவரிடம், சமந்தா குறித்து ஒரு ரசிகர் கேட்டதற்கு, தி பேமிலி மேன் சீஸன் 2 இல் சமந்தாவை முழுமையாக ரசித்ததாகவும், அவருடன் படம் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
சமந்தா குணசேகரின் சாகுந்தலம் படத்தை நிறைவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் பிறகு சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளவிருப்பதாக முன்பு கூறியவர், அதற்கு மாறாக நெட்பிளிக்ஸுக்காக எடுக்கப்படும் புதிய வெப் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.