இன்றைய வேத வசனம் 4.10.2021
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான் அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.
ஒருநாள் சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர் அப்போது ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல் மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.
அவனது கலைந்த தலைமுடியும் ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.
அவன் மன்னனிடம் அரசே உங்கள் உடல் தேறவேண்டுமென்று மருந்து செய்து கொண்டு வந்திருக்கிறேன் என்றான்.
அவன் அந்த மருந்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு முகம் சுளித்தார்கள்.
அரசனோ மருந்தை பெற்றுக்கொண்டு தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து அந்த விவசாயிக்கு பரிசளித்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர் அரசே கெட்டுப் போன மருந்துக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார்
மன்னனோ அது கெட்டிருந்தாலும் அந்த மருந்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான் அவனது அன்பு உண்மையானது.
போலித்தனம் இல்லாதது உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம் நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான்.
இதே போல நாமும் ஒருவரில் ஒருவர் அன்பு கூற அழைக்கப்பட்டிருக்கிறோம்.
யோவான் 13:35 ல் இயேசு சொல்கிறார்:
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
நாம் பிறர் மீது கூறும் அன்பினால் நாம் இயேசுவின் சீடர்கள் என்று பிறரால் அறியப்படுகிறோம் ஆக நாம் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும் என்பது நம்மை படைத்த இறைவனின் விருப்பமாய் இருக்குறது!
அன்பினால் உலகத்தையே தன் பக்கம் இழுத்துக் கொண்ட இயேசுவைப் போல நாமும் அன்பைக் கொண்டு அநேக ஆத்துமாக்களை இயேசுவின் சீடர்களாக்குவோம்!
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். யோவான் 4:8
ஆமென்!