இன்றைய வேத வசனம் 5.10.2021

#Prayer #Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 5.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஒரு பங்கு நிலமும் மூன்று மடங்கு தண்ணீரும் நிரம்பிய இப்பூமிப் பந்தில் இரவு நேர கடற் பயணங்கள் திகிலை தரக்கூடியவை.

உங்கள் பிரயாணம் சிறிய படகுகளில் அல்லது மீன்பிடி கலங்களில் இருந்தால் பிரயாணத்தின் ஆபத்துக்கள் உங்களுக்கு அதிர்ச்சிகளைத் தரலாம்.

பெரும் கப்பல்கள் மற்றும் வணிக கலன்கள் கடற்பயணத்தின் திகிலை குறைக்கின்றன. அவைகள் பாதுகாப்பாகவும், கடலின் பயங்களை நாம் உணராத வண்ணமும் செய்கின்றன. 

ஆனால் சிறு மீன்பிடி படகுகளில் இரவு நேரங்களில் தனியாகவோ அல்லது வெகுசிலரோடோ பயணிக்கும்போதுதான் கடலும், அலையும், இருளும், காற்றும் நம்மை எவ்வளவாய் சோர்ந்து போகச் செய்கிறது என்பதை உணர முடியும்.

ஒரு பகல் ஊழியத்தை முடித்துவிட்டு இயேசுவானவர் தம்முடைய சீஷர்களை அக்கரைக்குச் செல்ல துரிதப்படுத்தினார்.

அவர் அவர்களை அனுப்பிவிட்டு வனாந்தரமான ஒரு இடத்தில் தனித்திருந்தார். பொழுது கடந்துபோனது! புறப்படும்போது குதுகலமாய் இருந்த பயணம், படகு நடுக்கடலில் வந்தபோது நம்பிக்கைகள் குறைய ஆரம்பித்தது.

கடும் எதிர்காற்றில் எழும்பிய பேரலைகளில் அந்தப் படகு அலைக்கழிக்கப்பட்டது. இயேசு அவர்களோடு இருந்தால் ஒருவேளை சீஷர்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்;

ஏனெனில் அவர் காற்றையும் கடலையும் அவர்களுக்காக அதட்டி, சமாதானமான சூழ்நிலையை அவர்களுக்காக உருவாக்கி விடுவார். ஆனால் பிரச்சினையின் உச்சம் என்னவென்றால் அவர் அங்கே இல்லை!

நாலாம் ஜாமம் ஆகிவிட்டது, கடும் எதிர் காற்று அடிக்கிறது, படகு நகரமாட்டேன் என்கிறது! அக்கரை பிடிக்குமா, அல்லது பரலோகத்தின் கரையைத் தொடுவோமா என்கின்ற சூழலில் படகில் இருந்த சீஷர்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது எதிர்காற்றில் பொங்கி எழுந்த அலைகளின் மேலாய் ஆண்டவர் நடந்து வருகிறார்!

யோபு 9:8 -ல் அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர் என்று வாசிக்கிறோம்.

எல்லோரையும் தன் வாயினால் விழுங்கும் அலையை பிடித்து தன் கால்களின் கீழே மிதித்துக்கொண்டு தன் பிள்ளைகளை காக்க கடலின் மேல் விரைகிறார்!

பொங்கும் கடலும், இரையும் அலையும், உயிர்களை விழுங்கக் துடிக்கும் பிசாசும் அவர் கால்களின் கீழ் இருக்கிறது என்பதே இவ்விடத்தில் நாம் உணரும் சத்தியம்! 

கொரோனா பெருந்தொற்று பேரலையாக உலகத்தை மூடி விழுங்கத் துடித்த நேரங்களிலெல்லாம் அலைகளின் மேல் நடந்தவரின் கால்களுக்கு கீழேயே அவற்றின் வல்லமை இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

2 ம் அலை முடிந்து, 3 வது அலைக்கு உள ரீதியாக மக்களை ஆயத்தப்படுத்தும் ஊடகங்களும் உலகளாவிய சுகாதாரத் துறைகளும் தீவிரமாய் செயல்படும் இந்நேரத்தில் அலைகளின்மேல் நடந்தவரின் மீதே நம்முடைய பூரணமான விசுவாசம் ஓங்க வேண்டும்!

"இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக் கடவது. (யோபு 38:11) என்று சொல்வதற்கு அவர் ஒருவரிடமே அதிகாரம் இருக்கிறது!

மரண அலைகள் என்னை சூழ்ந்து கொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னை பயப்படுத்தினது. (2 சாமுவேல்  22:5) என்று ஒருவேளை நாம் கூறலாம்.

உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என் மேல் புரண்டு போகிறது (சங்கீதம் 42:7) என்று நாம் ஒரு வேளை கதறிக் கொண்டு இருக்கலாம்!
ஆனால் அவர் நமது படகை நோக்கித் தான் வந்து கொண்டிருக்கிறார். சமுத்திரங் களின் மும்முரத்தையும் அவர்களுடைய அலைகளின் இரைச்சலையும் ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறார். (சங்கீதம் 65:7 ) என்று வாசிப்பதைப்போல,

தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும் போது அவைகளை அடங்கப் பண்ணுகிறீர் (சங்கீதம் 89:9) என்று வாசிப்பதைப் போல, நம்மை நோக்கி வருகிறவர் நம்மை அவரை நோக்கி அழைக்கிறார்.

நான் கடலின் மேல் நடந்தால் நீயும் நடக்கலாம், எனக்கு அலைகள் கீழ்ப் பட்டிருந்தால் உனக்கும் கீழ்ப்பட்டிருக்கும் என்னை விழுங்க முடியாத அலைகள் உன்னையும் விழுங்கப் போவதில்லை என்று உற்சாகமூட்ட , விசுவாசத்தில் பலப்படுத்த நடந்து வா என்கிறார்!

ஆனால் நாமோ நடக்க ஆரம்பித்த பின்பு பயந்து போய் அமிழ்ந்து போகிறேனே என்று அலறி விடுகிறோம்!
சின்ன கடிந்துகொள்ளுதலோடு நம்மை தூக்கிவிடுகிறார்! நம் வாழ்நாளெல்லாம் நம்மோடு கூடப் பயணிக்கிறார்! 

கொரோனாவின் கோர அலைகள் ஒரு வேளை உங்களை உலுக்கி இருக்கலாம். உங்களுக்கு பிரியமானதை உங்களிடமிருந்து பறித்து சென்று இருக்கலாம்.
ஆனாலும் நீங்கள் அவருடையவர்கள். உங்கள் படகில் அவர் இருக்கிறார். அவருக்கு பிரியமானதை உங்களிடமிருந்து தன்னிடம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் உங்களை தேற்றும்படி, உங்கள் கவலைகளையெல்லாம் அற்றுப் போகும்படி, உங்களோடுதான் பயணிக்கிறார்.

மூன்றாவது அலை என்ன முப்பது அலைகள் வந்தாலும் அலைகளின் மேல் நடந்தவர், அலைகளைக் கீழாக்கிப் போட்டவர் நம்மோடு கூட இருக்கிறார்.

திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும் சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் பார்க்கிலும் கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர். ( சங்கீதம் 93:4 ).

அந்த வல்லமையின் வார்த்தையானவரையே நம் வாழ்வின் ஒரே நம்பிக்கையாக்குவோம். தேவ சமாதானம் நம்மை நிறைவாய் ஆளக்கடவது!

ஆமென்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!