இன்றைய வேத வசனம்06.10.2021
தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்த ஒரு வாலிபன் காலப்போக்கில் தவறான நண்பர்கள், தவறான பழக்கம் அவனை ஒரு சமூக விரோதியாய் மாற்றிவிட்டது.
எனவே அவன் ஒரு கொள்ளைக்காரனாய் மாறினான். இரவில் தனியாக வரும் நபர்களை கொள்ளையடித்து பிழைப்பு நடத்தும் ஒரு மனிதனாய் மாறினான்.
இப்படியேக் காலங்கள் ஓட, மூர்க்கமும், பாவமும் நிறைந்த மனிதனாய் மாறினான். எத்தனையோ நபர்களை காயப்படுத்தி, கொள்ளையடித்து வாழ்ந்து வந்தான்.
ஒருமுறை தனியாக வந்த பெண்ணிடம் உள்ள நகையைப் பறித்து, அவளுடைய வாழ்க்கையை கெடுக்கும் நோக்கத்தோடு அவளை நெருங்கினான். அப்பொழுது அந்த பெண் அவனைப் பார்த்து, நான் இயேசுவின் பிள்ளை உன்னால் என்னைத் தொட முடியாது என்று சொன்னாள்.
உடனே அவன் அவளைப் பார்த்து, நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, மது அருந்திவிட்டு உன்னைப் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை ஒரு பாழடைந்த அறைக்குள் அடைத்துவிட்டுச் சென்றான்.
சில மணி நேரம் கழித்து, ஒரு தவறான எண்ணத் தோடு அந்த அறையின் கதவை அவன் திறந்தபோது, அந்த பெண் முழங்காலில் ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவன் அதிர்ந்து போனான்.
அவளைச் சுற்றிலும் ஒரு தீ வளையம் எரிந்துக் கொண்டிருந்தது. அவனுடைய கண்களால் அதை நம்பமுடியவில்லை. அவனுடைய போதை தெளிந்தவனாய் வியந்து நின்றான்.
அவனால் அந்த தீ வளையத்தைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. அந்தப் பெண் ஜெபத்தை முடிக்கும்போது அந்தக் கொள்ளைக்காரன் அவளைப் பார்த்து, நீ யார்? நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பெண் நான் இயேசப்பாவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னாள்.
அப்பொழுது அந்தக் கொள்ளைக்காரன், உன்னுடைய கடவுள் உண்மையான கடவுள், அவர் உன்னைக் காப்பாற்றினார், உன்னுடைய தேவனே மெய்யான தேவன் என்று கொள்ளைக்காரன் சாட்சி கொடுத்தான்.
பின்னர் அவனும் மனம்மாறி ஒரு புது மனிதனாய் சமுதாயத்தில் வலம் வர ஆரம்பித்தான்.
நண்பர்களே! நாம் ஆராதிக்கும் தேவன் யெகோவா ஹமெத் (மெய்யான தேவன்).
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள் (எரேமியா 10:10).
அவரைப்போல ஒரு தேவன் இல்லை. அவர் இன்றைக்கும் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
ஆபத்திலிருந்து மட்டும் காக்கும் தேவன் அல்ல, கொடூர நெஞ்சம் கொண்ட கொள்ளைக்காரனும், மனம்மாறி, நேர்மையான வழியில் வழி நடத்தும் வல்லமையுள்ள தேவன்.
அவர் நம்மோடு இருக்கும்போது, நாம் எதற்கும் கலங்க வேண்டாம். அவரின் அன்பை அறியாத ஜனங்களுக்கு அவரை அறிவிப்பதே நம்முடைய பொறுப்பு.
அவரை நமக்குள், மறைத்து வைக்காமல்! ஒளித்து வைக்காமல்! வெளிப்படையாய் அவர் அன்பை அனைவருக்கும் அறிவிக்க ஆசைப்படுவோம்! அவரே நம்முடைய வழியை வாய்க்கப்பண்ணுவார்! ஆமென்!!