அதிகம் பேசும் பெண்...

Prabha Praneetha
3 years ago
அதிகம் பேசும் பெண்...

ஒரு பிரச்னையின்போது, பெண் தன் மனதிற்கு வெளியே மற்றவர்களுடன் பேசுவாள். அதை நம்மால் கேட்க முடியும். ஆனால் ஓர் ஆண், தன் மனதுக்குள்ளேயே பேசிக்கொள்வான்.

பெண்கள் எவ்வளவுதான் பேசினாலும் அவர்களிடம் வார்த்தைகள் குறைவதே இல்லை. ஒரு பெண், தன் தோழிகளுடன் கூடிப் பேசுவதில் காட்டும் அதீத ஆர்வத்தை, ஓர் ஆண் தன் நண்பர்களுடன் பேசுவதில் காட்டுவதில்லை.

பேச்சில் ஆண், பெண் இருவரின் உளவியலும் வேறு வேறு. இந்த உளவியலைப் புரிந்துகொள்ளாத ஓர் ஆண், ஹாசினி டைப்பில் பேசிக்கொண்டேயிருக்கும் தன் காதலியிடம், 'கொஞ்சம் பேசாம இருடி, எப்போ பார்த்தாலும் தொனத்தொனன்னு பேசிட்டே இருக்க' என்று கூறினால் என்ன நடக்கும்? உடனே பிரேக்-அப்பும் பேக்-அப்பும்தான்!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரும் சண்டையே இந்தப் பேச்சால்தான். அதிகம் பேசுவது பெண்ணின் தவறும் இல்லை; அதிகம் பேசுவதை விரும்பாதது ஆணின் தவறும் இல்லை.

இது, ஆண்-பெண் மூளை அமைப்பையும் அவர்களின் உளவியலையும் சார்ந்தது. இதைப் புரிந்துகொண்டாலே போதும்... தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஆண்கள் மற்றும் பெண்களின் 'பேச்சு' பற்றிய உளவியலை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன் - பார்பரா பீஸ் தம்பதி, தங்களின் 'ஆண்கள் ஏன் கேட்பதில்லை' என்ற புத்தகத்தில் அழகாக விவரித்துள்ளனர். அதிலிருந்து...

எந்த நாட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் பேசுவதை கேட்டுப்பாருங்கள். ஆண், பெண் மூளையின் வடிவமைப்பு, அவர்களை இரு வேறு விதமாகப் பேசவைப்பதைக் காணலாம்.

யார் யாரை நேசிக்கிறார்கள், யார் யாருடன் கோபமாக இருக்கிறார்கள் என்பது பற்றி சிறுமிகள் பேசுவார்கள். 

அவர்கள், சிறுசிறு குழுக்களாக விளையாடுவார்கள். உறவை வளர்க்க மற்றவர் பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

வளர்ந்த பின்னர் பெண்கள், உணவுக்கட்டுப்பாடு, தனிப்பட்ட உறவுகள், திருமணம், குழந்தைகள், காதலர்கள், குணநலன்கள், ஆடைகள், தனிப்பட்ட பிரச்னைகள் என எது பற்றியும் பேசுவார்கள்.

ஆனால், சிறுவர்களைப் பொறுத்தமட்டில், யார் என்ன செய்தார்கள்... யார் எதில் சிறந்து விளங்குகிறார்கள், பொருள்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றியும், அவர்கள் வளர்ந்த பிறகு, விளையாட்டு, தொழில், செய்தி, அவர்கள் என்ன செய்தார்கள், எங்கே சென்றார்கள் என்பது பற்றியும், தொழில்நுட்பம், கார்கள், செல்போன்கள் போன்ற கருவிகள் பற்றியும்தான் பேச விரும்புவார்கள்.

'பெண்கள், தொலைபேசியில் அதிக நேரம் பேசிக்கொண்டே இருப்பார்கள்' என்பது ஆண்களின் புலம்பல். தகவல்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கான வழியாகத்தான் ஆண்கள் தொலைபேசியைக் கருதுகிறார்கள்.

ஆனால், பெண்கள் அதை உறவை வளர்ப்பதற்கான வழியாகக் காண்கிறார்கள். ஒரு பெண் தன் தோழியுடன் இரண்டு வாரம் சுற்றுலா சென்று திரும்பிய பிறகும், அவளுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேச முடியும்!

உலகெங்கும், ஆண்கள் பெண்களிடம் கூறும் வாசகம், 'கொஞ்சம் புரியுற மாதிரிதான் சொல்லேன்' என்பதுதான். பெண்கள் பேசும்போது, நேரடியாக எதையும் கூற மாட்டார்கள். தனக்கு என்ன தேவை என்பதை குறிப்பாகத்தான் கூறுவார்கள்.

மறைமுகமாகப் பேசுவது பெண்களின் தனித்தன்மை. அதற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் உண்டு. இந்த மறைமுகப் பேச்சு, உறவையும் பழக்கத்தையும் வளர்க்க, பிளவையும் பிணக்கத்தையும் தவிர்க்க உதவுகிறது.

அழுத்தமுள்ள சூழலில் ஒரு பெண்ணின் பேச்சு தூண்டப்படுகிறது. மன அழுத்தம் உள்ள நேரத்தில் அவள் பேச ஆரம்பித்து, பேசிக்கொண்டே இருக்கிறாள்.

அவளால் தன் தோழிகளிடம் மணிக்கணக்காகத் தன் பிரச்னைகளைப் பற்றிப் பேச முடியும். நுட்பமாக விவரிக்க முடியும். 

பிறகு, அவர்கள் அனைவரும் அந்தப் பிரச்னைகளைப் பற்றி அலசி ஆராய்வார்கள். 

இப்படிப் பேசுவதால், பெரும்பாலும் அந்தப் பெண்ணுக்கு எந்தத் தீர்வும் கிடைத்துவிடாது. ஆனால் அந்தப் பேச்சு, பிரச்னைகள் முடிந்துவிட்டதைப் போன்ற ஒரு விடுதலையை அந்தப் பெண்ணுக்குத் தந்துவிடும்.

மொத்தத்தில், அதிகமாகப் பேசுவது பெண்களின் குறையும் இல்லை. குறைவாகப் பேசுவது ஆண்களின் தவறும் இல்லை.

இந்த உளவியலைப் புரிந்துகொண்டால் உறவுகளுக்கு இடையே எழும் வீணான விவாதங்களுக்கும் வாய்ப்பில்லை. புரிந்துகொள்ள முயல்வோம்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!