பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
1985 ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ திரைப்படத்தில் ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் பிறைசூடன்.
கேளடி கண்மணி, இதயம், பணக்காரன், அமரன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார்.
மேலும், 5000க்கும் அதிகமான பக்திப் பாடல்களும், 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கான பாடல்களையும் எழுதிய பெருமைக்கு உரியவர்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசைப்பாளர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயகம், என் ராசவின் மனசிலே படத்திற்காக தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் பெற்றுள்ளார்.