இன்றைய வேத வசனம் 11.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
சமூக வலைத்தளங்கள் இன்று பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக மாறிவருகின்றன.
மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகமாக கொண்ட நம்முடைய நாட்டில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்னும் கூடுதலானது.
நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கையடக்க கணினி மற்றும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவருகிறது.
சமூக வலைத்தளம் என்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்றவைகளாகும்.
ரெயிலிலும், பஸ்களிலும் ஒருவரையொருவர் பார்த்தால், புன்முறுவல் செய்ய நேரம் இல்லாத அளவுக்கு ஒவ்வொருவரும் தத்தம் செல்போன்களில் மூழ்கிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக செல்போனில் சமூக வலைத்தளங்களை தான் எந்நேரமும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
சில நன்மையான விஷயங்கள் சமூகவலைதளங்களில் இருந்தாலும், பல பாதகமான விஷயங்களும் சமூகவலைத்தளங்களால் ஏற்படுவது உண்டு. குறிப்பாக, ஆதாரமற்ற, மேம்போக்கான தவறான தகவல்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. அவற்றை உண்மை என்று நம்பிவிடும் அபாயமும் உள்ளது.
மேலும் எளிதில் யார் மீதும் அவதூறு பரப்பும் செயலுக்கும் சமூக வலைத்தளங்கள் அடிபணிகின்றன.
அதைப்போலவே, பேஸ்புக் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகள் அளித்தாலும், சில நேரங்களில் கூடா நட்பு கேடாய் முடியும் விபரீதமும் அரங்கேற வாய்ப்புண்டு.
குறிப்பாக, பெண்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படும் செய்திகளை நாம் பார்க்கிறோம். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையையே சிதைத்துவிடும்.
எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம் ஒன்றில் பெண்மணி ஒருவர் கணவன், குழந்தைகள் வெளியே சென்றவுடன் பொழுது போக்கிற்கு பேஸ்புக்கில் நேரம் செலவழிப்பார். அதில் அறிமுகமான ஒரு ஆணுடன் உரையாடத் தொடங்கினார். நெருங்கிய நண்பர்களானார்கள்.
ஒருகட்டத்தில் அந்த ஆண், பெண்மணியை மிரட்டி பணம் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. தக்க சமயத்தில் கணவரிடம் நடந்ததை கூறியதால் பிரச்சினையின்றி சிக்கலிலிருந்து மீள முடிந்தது.
இன்றைக்கு பெருகிவரும் மணவிலக்குகளுக்கு சமூக வலைத்தளங்களும் பெரும்பங்கு ஆற்றுகிறது என்பது வேதனையான ஒன்று. புதிய கண்டுபிடிப்புகளால் ஒரு பக்கம் நன்மை இருந்தாலும் இன்னொரு பக்கம் பாதகமும் இருக்கத்தான் செய்கிறது.
மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் இதே நிலைதான். ஒரு பக்கம் பயணம் எளிதானாலும் இன்னொருப் பக்கம் விபத்துகள் அதிகரித்தன. அதற்காக நாம் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பதில்லையே. எதிலும் எச்சரிக்கையோடும் கவனத்துடனும் செயல்படும்போது எத்தகைய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் எளிதில் ஆட்கொள்ளமுடியும்.
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. மற்றவையெல்லாம் மாறிக்கொண்டே இருப்பவை. ஆகவே சமூக வலைத்தளங்களை ஞானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
சமூக வலைத்தளங்கள் அளிக்கும் நன்மைகளையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதும் விபரீதங்களில் இருந்து விலகி நிற்பதும் நம் கரத்தில் தான் இருக்கிறது
ஆகவே தான் வேதம் சொல்கிறது.
நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு