மூன்று மந்திரங்கள்

#Student
Prathees
2 years ago
மூன்று மந்திரங்கள்

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நிரந்தர அல்லது நீண்ட நாள் மெமரி என்பதுதான் நம் இலக்கு. அதிலே கொண்டுபோய் பாட விவரங்களை எல்லாம் சேமித்து வைத்துவிட்டால் போதும். நூற்றுக்கு நூறு நிச்சயம்!

மிகச் சுலபமான எல்லோராலும் கடைப்பிடிக்கக்கூடிய, அதே நேரம் அவசியமான மூன்று மந்திரங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இந்த மந்திரங்கள் மட்டும் தெரிந்துவிட்டால் போதும். மெமரி குறித்து கவலையே இல்லை!

முதல் மந்திரத்தின் பெயர்- ஆர்வம்

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் நீண்ட நாள் ஞாபகத்தில் இருப்பதில்லை. ஏனோ தானோ என்றும், வேண்டா விருப்புடனும், கடமையே எனவும் செய்யப்படும் எந்த வேலையும் நீண்ட நாள் மெமரியில் இருப்பதில்லை; அதனால் பயனும் இல்லை.

இதுதான் முதல் மந்திரம். வகுப்பறைக்குள் செல்லும்போது, இன்று நாம் புதிதாகப் பாடமொன்று கற்றுக்கொள்ளப்போகிறோம்; அதனால் ஆர்வம் அதிகம் இருக்கிறது எனும் சிந்தனையை பலமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்தின் மீது ஆர்வத்தை எப்படி அதிகமாக்குவது? வழி எளிமையானது
நம்மைப் போலவே பல மாணவர்கள் அதே பாடத்தை இதற்கு முன்பு படித்து பரிட்சை எழுதி பாஸாகி மேல் வகுப்புகளுக்கு சென்று கற்று இன்று வேலையில் / தொழிலில் சாதித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே இருங்கள்.

நான் கற்றுக்கொள்வதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறேன் என்பதை தினசரி உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள்! இதை விளையாட்டாக இல்லாமல், ஆழ்மனத்தில் உங்களுக்கு நீங்களே பதிய வைத்துக்கொள்ள சொல்லிக்கொண்டே இருங்கள்!

அந்தப் பாடம் நமக்குப் புரியாது, ரொம்ப கஷ்டம் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைப்பது உங்களுக்கு எதிராகவே வேலை செய்யும் என்பதை நிச்சயம் புரிந்துகொள்ளுங்கள்.

பாடம் புரியவில்லை என்றால், தயங்காமல் சந்தேகத்தை ஆசிரியரிடம் கேளுங்கள். சந்தேகம் கேட்பது கெட்டது இல்லை. அது மிகவும் நல்ல செயல். சந்தேகம் கேட்டால்தான் அறிவு வளரும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

கேள்வி கேட்டால் ஆசிரியர் கோபம் கொள்வார்; நண்பர்கள் கேலி செய்வார்கள் என கற்பனை செய்து கொள்ளாதீர்கள். கேள்வி கேட்காமல் இருப்பதால் வரும் நஷ்டம் ஆசிரியரின் கோபத்தைவிட, நண்பர்களின் கேலியைவிட அதிகமானது.

பாடம் போரடிக்கிறது என நினைத்துக்கொள்ளாதீர்கள். போரடிப்பது என்று ஒன்று இல்லை என்பதுதான் உண்மை. மூளை சோர்வடைந்திருக்கும்போது நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. அப்போது கற்றுக்கொள்ள முயற்சி செய்தால் போரடிப்பதுபோலத் தெரியும்.

மூளையின் சோர்வைப் போக்க நல்ல வழிகள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்தல், இசை கேட்பது போன்றவை. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் செய்யும்போது மூளையில் புதிய நியூரான்கள் உருவாகும். அவை, கற்கும் விஷயத்தை மெமரியில் வைத்துக்கொள்ள உதவும். ஆர்வத்தையும் அதிகரிக்கும்.

இரண்டாவது மந்திரத்தின் பெயர் -ஆச்சரியம்

புதியதாக ஒன்றைத் தெரிந்துகொள்வது ஆச்சரியமானதுதானே! அப்படி ஆச்சரியமிருந்துவிட்டால், அதன் மீது ஈடுபாடு வந்துவிடும்!

குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு எழுத்தும் தெரிந்துகொள்வதும் ஆச்சரியமாக இருந்தது. அதன் பின்னே எழுத்துகளைச் சேர்த்து வார்த்தைகளாக மெல்ல மெல்ல பேசியது ஆச்சரியமாக இருந்தது.

அப்படியே வார்த்தைகள் கோர்வையாகி வாக்கியங்களாக நாம் பேசுவதும் ஆச்சரியமானதுதான். அதுபோலத்தான், புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்த பாடமும்.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏனைய மொழிகளில் பெரும் படைப்புகள் செய்தவர்கள் இப்படி படிப்படியாகக் கற்றுக்கொண்டவர்கள்தான் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அறிவியலில் பெரும் கண்டுபிடிப்புகளைத் தந்த அறிஞர்களும், கோட்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளும் இப்படி நம்மைப்போல அடிப்படைப் பாடங்களை முயற்சி செய்து கற்றுக்கொண்டவர்கள்தான் என்பதை நினைத்துப் பாருங்கள்.

பெரிய நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் நம்மைப் போலவேதான் அடிப்படைப் பாடங்களை வகுப்பறையில் அமர்ந்து முயற்சி செய்து கற்றுக்கொண்டவர்ள் என்பதும் ஆச்சரியமானதுதானே.

உலகில் சாதாரணமானவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்கள்தான் சாதனை செய்திருக்கிறார்கள். அவர்களும் நம்மைப்போலவே பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என முயற்சி செய்து, விடாமுயற்சியின் வழியாகத்தான் சாதனை புரிந்திருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது சோர்வு பறந்துபோய் ஆச்சரியம் வருமே!

மூன்றாவது மந்திரத்தின் பெயர்- ஈடுபாடு

பாடத்தின் மீது ஏன் ஈடுபாடு வர வேண்டும்? விடை மிக எளிமையானது.

ஈடுபாட்டுடன் செய்யும் எந்த வேலையும் மகிழ்ச்சி தரும். ஈடுபாட்டுடன் செய்யும் எந்த வேலையும் வெற்றி தரும்.மகிழ்ச்சியும் வெற்றியும் இணைந்திருந்தால் உயர்வு வரும். உயர்வாக இருப்பதுதானே இலக்கு.

ஈடுபாடு இல்லாமல் ஒரு விளையாட்டை விளையாடினால் அது சுவைக்குமா, அந்த ஆட்டத்தில் வெற்றி கிடைக்குமா, அதுபோலத்தான் பாடங்களும்.

ஈடுபாடு இருந்தால் கஷ்டம் என நினைக்கும் பாடமும் எளிமையாக இருக்கும், சுவைக்கும், வெற்றி கிடைக்கும்.

மூன்று மந்திரங்களையும் தெரிந்துகொண்டாயிற்று!