வசூலில் அசத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நீண்ட பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை அன்று 50 சதவிகித இருக்கை அனுமதியுடன் திரையரங்குகளில் திரைக்கு வந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளிவரும் பெரிய நடிகரின் படம் என்பதால் இப்படம் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானது.
அதை கொஞ்சமும் ஏமாற்றாமல் காட்சிக்கு காட்சி நகைச்சுவையை வைத்ததோடு குடும்பங்கள் கொண்டாடும் விதமாக சுவாரசியமாக திரைக்கதையை உருவாக்கியதால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதல் காட்சியில் இருந்தே இப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததன் விளைவாக அடுத்தடுத்த காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி இப்படம் ஓடும் திரையரங்குகளை திருவிழாக்கோலம் காண செய்துள்ளது.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 8.20 கோடி ரூபாய் இப்படம் வசூல் செய்துள்ளதன் மூலம் இந்த ஆண்டு மாஸ்டர், கர்ணன் படங்களுக்கு பின் அதிக ஓபனிங் பெற்ற படம் எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது.
மேலும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து இப்படம் பிரம்மாண்ட வெற்றியை அடைந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் அரபு நாடுகளிலும் முதல் இரண்டு நாட்களில் தலா ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படம் அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் விஜய்யின் மாஸ்டர் படத்தையும் மிஞ்சி அசத்தியுள்ளது.
மேலும் இந்த வாரம் ஆயுதபூஜை சிறப்பு விடுமுறை வருவதால் இப்படம் கூடுதலாக வசூல் செய்து சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், ஓடிடியின் அசுர வளர்ச்சிக்கு பின் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள டாக்டர் திரைப்படம், நல்ல படம் வந்தால் நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுப்பார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளது.