இன்றைய வேத வசனம் 21.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஜெராட் ஆடு மேய்க்கும் மிகவும் ஏழ்மையான சிறுவன். தன் வேலையில் உண்மையுள்ள வனாக இருந்தான்.
ஒரு பள்ளத்தாக்கின் அருகில் தன் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான். அருகில் மரங்களும், புதர்களும் நிறைந்த ஒரு காடு இருந்தது.
அதனுள்ளிருந்து ஒரு வேட்டைக்காரர் வெளியே வந்து, "தம்பி, இங்கிருந்து பக்கத்திலுள்ள கிராமத்திற்கு செல்ல எவ்வளவு தொலைவு என்று ஆடு மேய்க்கும் சிறுவனிடம் கேட்டார்.“
ஆறு மைல் தூரம் செல்ல வேண்டும், ஆனால் ஆடுகள் செல்லும் தடம்தான் அந்த கிராமத்திற்கு செல்லும் பாதை என்பதாக சொன்னான்.
அந்த வழி மிகவும் கடினமான பாதை, எளிதில் பாதை தவறி போய்விட முடியும் என்பதாகவும் சொன்னான்.
தனி வழி போகும் பாதையாகத் தெரியவில்லை என்பதை வேட்டைக்காரர் பார்த்தார்.
மீண்டும் அவர், தம்பி, நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன், நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை, உன் ஆடுகளைச் சற்று நேரம் விட்டு விட்டு எனக்கு வழிகாட்டு, நான் உனக்கு நிறைய சன்மானம் தருகிறேன் என்றார்.
உடனே சிறுவனும், ஐயா! உங்களுக்கு உதவி செய்ய எனக்கு ஆசைதான், ஆனால் என் ஆடுகளை தனியாக விட்டால் கொடிய மிருகங்கள் அவைகளைக் கொன்று விடும் என்று மறுமொழி கூறினான்.
தம்பி, அதனால் என்ன? அவை உன் ஆடுகள் அல்லவே. உன் முதலாளிக்கு பெரும் நஷ்டம் ஏற்படாதபடி , நஷ்டத்தைவிட பல மடங்கு சன்மானம் நான் உனக்குத் தருகிறேன், எப்படியாவது நீ எனக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும் என்றார்.
மன்னிக்க வேண்டும் ஐயா, என் எஜமான் என்னை நம்பி இந்த ஆடுகளை என்னிடம் ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு உதவி செய்ய வந்தால், அது நம்பிக்கை துரோகமாகும். அது காலத்தைக் களவாடிய செய்கையுமாகும்.
அந்த நேரத்தில், எந்த ஆடாவது தொலைந்து போனால், அது நானே அதைத் திருடிய குற்றத்திற்குச் சமமாகும் என்றான் சிறுவன்.
பெரியவர் எப்படியாவது அவன் உதவியைப் பெற விரும்பினார். ஆனால் சிறுவனின் பதில் தம் வாயை அடைத்து விட்டது. அதேநேரம் அவன் உண்மையினிமித்தம் அவர் உள்ளத்தில் மகிழ்ச்சிக்கொண்டார்.
தம்பி ஒருநாளும் உன்னை மறக்கமாட்டேன் பாதையைக் காட்டு, நானே போக முயற்சிக்கிறேன் என்றார் பெரியவர்.
அப்போது, அவரைத் தேடி அலைந்த நண்பர்களும், அங்கு வந்து சேர்ந்தார்கள். அடுத்த சிறிது நேரத்தில், அந்தப் பெரியவர் அந்நாட்டின் மன்னன் என்றும், அந்தப் பள்ளத்தாக்கும், நாடுகளும் அவருக்கே சொந்தமென்றும் தெரிந்து கொண்டான் சிறுவன் ஜெராட்.
வீடு திரும்பிய மன்னன் ஜெராட்டை அழைத்து அவனைப் படிக்க வைத்தார். சிறுவன் ஜெராட் நன்கு படித்து உயர்ந்த நிலையை அடைந்தான். தன் ஏழ்மை நிலையிலும் உண்மையை அவன் கைவிடவில்லை.
கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன். (மத்தேயு 25:21).
அன்பான நண்பர்களே, இந்தச் சின்னத் தம்பியின் உண்மையினிமித்தம் அவன் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடிந்தது.
நீங்களும் சிறு சிறு காரியங்களில் உண்மையாக இருக்கும்போது, உன்னத தேவன் உங்களையும் உன்னத நிலையில் வைப்பார்! உண்மையாக இருங்கள்!
ஆமென்!