போதைப் பொருள் வழக்கு- நடிகை அனன்யா பாண்டேவிடம் இன்று விசாரணை
சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.
இந்த நிலையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது லேப்டாப் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, அனன்யா பாண்டே விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் வாங்க உதவுவதை குறிக்கும் வகையிலான வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பாக அனன்யா பாண்டேவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், போதைப் பொருள் பயன்பாடு, மற்றும் சப்ளை தொடர்பான குற்றச்சாட்டை அனன்யா பாண்டே மறுத்துள்ளார்.