‘ஜெய் பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபன் டுவிட்
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்தை பார்த்த இயக்குனர் பார்த்திபன், படக்குழுவை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெய்பீம்’ படம் குறித்து ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்... நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கி கரைந்தேப் போனேன்.
சந்துரு சார்! - இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன்.
அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன்.
சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்”. இவ்வாறு இயக்குனர் பார்த்திபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.