இன்றைய வேத வசனம் 09.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
என் அன்புக்குரிய நண்பர்களே, கிறிஸ்தவத்தில் காணப்படும் தனித்துவமிக்க சிறப்பை இன்று நாம் ஆராய்வோம்.
தனித்துவமிக்க என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம், அச்சிறப்பு வேறு மார்க்கங்களில் நான் கண்டதில்லை.
ஆம் நண்பர்களே, அத்தகைய உன்னதமான சிறப்பு நாம் கிறிஸ்தவத்திலும், இயேசு கிறிஸ்துவிலும் காண முடியும். அதுதான் இயேசு கிறிஸ்துவின் உன்னதமான மீட்பு.
அந்த மீட்பு மற்றும் பாவ மன்னிப்பின் எதார்த்தத்தைக் குறித்து ஆராயலாம்.
உலகில் பரவலாக காணப்படும் அனைத்து மார்க்கங்களும் மனிதனுக்கு அவனுடைய கிரியைகளின் நிமித்தமே இரட்சிப்பு உண்டாகும் என்று கூறுகிறது . அதாவது ஒருவன் செய்யும் பாவங்களை விட நன்மைகள் அதிகமாக அவனிடம் காணப்பட வேண்டும். என்பதாக கூறுகின்றன.
அதேசமயம் நீங்கள், நான், நாம் அனைவரும் பாவம் செய்திருக்கிறோம்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானோம் (ரோமர் 3:23) என்று வேதம் சொல்கிறது.
அதேபோல, நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் (1 யோவான் 1:8) என்று வேதம் சொல்கிறது.
இவ் வசனங்களிலிருந்து ஒரு காரியம் நமக்கு உறுதிபட விளங்குகிறது.
ஒருவரும் பரிபூரணமானவர்கள் இல்லை (Nobody is Perfect). அதேநேரம், தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் என்றும் பரிபூரணரென்றும் வேதம் கூறுகிறது.
தாவீது ராஜா தன்னுடைய ஒரு சங்கீதத்தில், இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் (சங்கீதம் 51:5) என்று சொல்கிறார்.
இப்பாவம் செய்யும் துர்குணம் நமக்கு எங்கிருந்து வந்தது?
ஆம் நண்பர்களே, நீங்கள் சிந்தித்தது சரியே! ஆதாம், ஏவாள் ஆதியாகமம் 3 ம் அதிகாரத்தில் தேவன் புசிக்க வேண்டாம் என்று கட்டளையிட்ட அக்கனியைப் புசித்தப்படியினால் மனுகுலத்தின் மேல் பாவம் வந்தது.
அவர்கள் வழிதான் பூமியில் மனிதர்கள் தலைமுறைகளாக வரத் தொடங்குகிறார்கள் இவ்வாறாக, பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் பாவம் செய்யும் ஆற்றல்/தன்மை உடன் வருகிறது.
ஆகவே பாவத்தில் பிறக்கும், பாவத்தில் வாழும் நாம் எப்படி நம்முடைய கிரியைகளின் மூலமாக பரிசுத்தமான தேவனைப் பிரியப்படுத்தவோ அல்லது அவர்முன் நிற்கவோ முடியும்?
இங்குதான் நம்மீது கொண்டுள்ள அந்த அன்பின் நிமித்தம் தேவனே அதற்கான வழியை ஏற்படுத்துகிறார்.
வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்த மாட்டாது. (எபிரெயர் 10:1) என்று வாசிக்கிறோம்.
இதன் அர்த்தம் தொடர்ந்து செலுத்தப்படும் மிருகங்களின் பலி மனிதனுடைய பாவத்தை முற்றிலுமாக போக்காது என்பதாகும் .
அதேநேரம், மனிதன் செய்த, செய்கிற பாவங்களுக்கான நிவிர்த்தி அல்லது பரிகாரம் இல்லாமல், தேவனால் மனிதனையும் மன்னித்து மீட்க முடியாது.
காரணம், அவர் நீதியுள்ள தேவன். ... ஆகவே, பிதாவாகிய தேவன்தாமே மனிதனுடைய பாவத்திற்கான பரிகாரத்தையும், மனிதனுடைய மீட்பின் வழியையும் தன்னுடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக உருவாக்குகிறார்.
ஆம் நண்பர்களே, மற்ற மதங்கள் கூறுவதுபோல, பாவத்தால் ஆளப்படும் நம்முடைய கிரியைகள் எப்படி ஒரு பரிசுத்தமான தேவனை பிரியப்படுத்தும்?
ஆகவேதான் பாவத்தின் நிழல்கூட இல்லாத இயேசு நம்முடைய மீட்பிற்காய் பலியானார்.
ஒரு எளிமையான உதாரணம் சொல்லவேண்டுமானால், பால் கெட்டுப்போயிற்றென்று அதனால் போடப்படும் தேனீரும் கெட்டுப்போய்தான் இருக்கும்.
ஆகவே, நம்முடைய கிரியைகள் நம்மை மீட்காது. மாறாக, இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசமே நம்மை மீட்கும் என்பது மிகத் தெளிவாகிறது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ நாம் புதிய சிருஷ்டியாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.
காரணம், பழைய மனிதன் பாவத்தால் ஆளப்படுகிறபடியால், அவனுடைய கிரியைகள் தேவனைப் பிரியப்படுத்தாது.
நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது , 2 கொரிந்தியர் 5:17 ம் வசனத்தில் சொல்வதுபோல, புதுசிருஷ்டியாக மாறுகிறோம்.
இதிலிருந்து விசுவாசத்தின் மூலம் வருகிறதான பாவமன்னிப்பும், மீட்பும் மற்ற மார்க்கங்களில் காணப்படாத, தனித்துவமிக்க கிறிஸ்தவத்தின் சிறப்பு என்று தெளிவாகிறது.
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். (#மாற்கு 16:16)
ஆமென்!!