உலகளவில் புதிய சாதனை படைத்த ஜெய் பீம்
தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
ஒரு சில படங்கள் மட்டுமே பசுமரத்தாணி போல மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் ஜெய்பீம். இப்படத்தில் இருளர் இன மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட இருளர் இன தம்பதிகளாக மணிகண்டன் மற்றும் லியோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படம் தற்போது வரை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு தரப்பினரும் படம் குறித்து நல்ல கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஜெய்பீம் படம் புதிய சாதனை படைத்துள்ளது.
அதன்படி பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 250 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஜெய்பீம் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும், படத்திற்கு 9.6 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரமாகவே இது கருதப்படுகிறது.
அனைத்து படங்களையும் ஓவர் டேக் செய்து ஜெய்பீம் படம் செய்துள்ள இந்த புதிய சாதனை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம்
ஐஎம்டிபி வெளியிட்ட டாப் 1000 படங்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜெய்பீம் படத்திற்கு 9.6 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.