எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்
பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்திற்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.