விரைவில் தொடங்குகிறது கைதி -2
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘கைதி’.
நாயகியே இல்லாமல் வெளியான இப்படத்தில் ஹீரோவாக கார்த்திக் நடித்திருந்தார். இப்படம் வெளியான அதே நாளில் விஜய் நடித்த பிகில் படமும் வெளியானதால் கைதி படம் சரியாக ஓடாது என்றே அனைவரும் கருதினர்.
ஆனால் அனைவரின் கருத்தையும் தவிடுபொடியாக்கி பிகில் படத்தைவிட விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது கைதி படம். வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியையடுத்து விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.
இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அனிருத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படம் கைதி அளவிற்கு இல்லை என்றே கூறப்பட்டது.
இப்படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் தற்போது கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசிலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 67 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி படத்தை இயங்குவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கைதி படம் முடியும்போதே இரண்டாம் பாகத்திற்கான அஸ்திவாரத்துடனே முடிந்தது. ஏற்கனவே இதற்கான சில காட்சிகளை முதல் பாகம் எடுக்கும்போதே எடுத்துவிட்டார்களாம். எனவே எஞ்சிய காட்சிகளை மட்டும் விரைவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை முடித்துவிட்ட தளபதி 67 படத்தை இயக்க உள்ளாராம் லோகேஷ்.