எம்.ஜி.ஆருக்கான தொப்பி தயாரிக்கப்படும் விதமே தனித்துவமானது..ரகசியம் என்ன தெரியுமா?

Reha
2 years ago
எம்.ஜி.ஆருக்கான தொப்பி தயாரிக்கப்படும் விதமே தனித்துவமானது..ரகசியம் என்ன தெரியுமா?

"அடிமைப்பெண்" படத்தின் படப்பிடிப்பு, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூரில் நடைபெற்றது. கடும்வெயில் காரணமாக, எம்.ஜி.ஆர் சோர்வடைந்தார். அப்போது, படப்பிடிப்பைக் காணவந்த ஒருவர், "புஸ்குல்லா" தொப்பியை அளித்து, அதை அணிந்து கொண்டால் சோர்வுகுறையுமென்று கூறினார். எம்.ஜி.ஆரும் அணிய, சோர்வு குறைந்ததுடன், அந்ததொப்பி, அவரின் அழகையும் கூடுதலாகக் காட்டியது. அந்ததொப்பியால், அவர் வயது குறைவானவர்போல காட்சியளிப்பதாக அனைவரும் பாராட்டினர். அன்றுமுதல் எம்.ஜி.ஆர் தொப்பியணிவதை நிரந்தரமாக்கிக்கொண்டார்.

ஆரம்பத்தில், தொப்பிகடைகளில், தொப்பிகளை வாங்கியணிந்த எம்.ஜி.ஆர், பிற்காலத்தில், தொப்பி தயாரிப்பதில் பிரபலமாக விளங்கிய, சென்னையைச்சேர்ந்த ரஜாக் என்பவரையே, தனது ஆஸ்தான தொப்பி தயாரிப்பாளராகவும் ஆக்கிக்கொண்டார்.

எம்.ஜி.ஆருக்கான தொப்பி தயாரிக்கப்படும் விதமே தனித்துவமானது. குளிர்பிரதேசங்களைச் சேர்ந்த செம்மறியாடுகளின் முடிகளை மட்டுமே இதற்குப் பயன்படுத்துவர்; பலகட்டங்களாக அதை மேம்படுத்துவர். இதனுள் மூவடுக்குகளில், கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும். வெளியே தெரியாத சிறுசிறுதுளைகளிருப்பதால், தொப்பியுள், வெளிக்காற்று நன்கு சென்றுவரும். இதனால், வியர்வை உள்ளிட்ட எந்த தொல்லைகளும் ஏற்படாது. எடையும் குறைவென்பதால், தொடர்ந்து அணிந்திருந்தாலும் சிரமமாக இருக்காது.

அடிக்கடி, இத்தகைய தொப்பிகளை மாற்றி, மாற்றி அணிந்து கொள்வார் எம்.ஜி.ஆர். அரைடஜன் தொப்பிகளை வரவழைத்து, அவற்றுள் இரண்டைத் தேர்ந்தெடுத்து அணிவார்.