ஆளுங்கட்சியினரால் கூட இந்த அரசு கவிழ்க்கப்படும்! -  தொழிலாளர் தேசிய சங்கம்

Reha
4 years ago
ஆளுங்கட்சியினரால் கூட இந்த அரசு கவிழ்க்கப்படும்! -  தொழிலாளர் தேசிய சங்கம்

"ஆளுங்கட்சி மூலம்தான் இந்த அரசுகூட கவிழ்க்கப்படும் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்." - இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

தற்கால அரசியல், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதேச மட்ட முக்கியஸ்தர்கள், மாவட்ட தலைவர்கள், அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினரின் கருத்துக்களைப் பெற்று தெளிபடுத்தும் கூட்டம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப ஹட்டன் அஜந்தா விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
 
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதி நிதி செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், கட்சியின் பொது செயலாளர் எஸ்.பிலிப், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த நிலைமை மேலும் மோசமாகும். எனவே, தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு ஆட்சியைக் கைவிட்டு, இந்த அரசு செல்ல வேண்டும்.

நாட்டிலே ஜனநாயகம் இல்லை. அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே இடம்பெறுகின்றன. மக்கள் பிரதிநிதிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக்கட்சி உறுப்பினர்களே தாக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. எனவே, ஆளுங்கட்சி மூலம்தான் இந்த அரசுகூட கவிழ்க்கப்படும் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாட்டில் பல பிரச்சினைகள் தாண்டவமாடும் நிலையில் ஜனாதிபதி வெளிநாடு செல்கின்றார். நிதி அமைச்சரும் அமெரிக்கா செல்கின்றார்.

அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எட்டப்பட்டு வர்த்தமானி மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு  ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உறுதிப்படுத்தப்பட்டது. பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து இதனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினர் கொண்டாடினர். வர்த்தமானி மூலம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான அழுத்தங்களை அரசில் இருப்பவர்கள் பிரயோகிக்க வேண்டும். அதனைவிடுத்து தற்போது போராட்டங்களை நடத்துவது நாடகமாகும்" - என்றார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4