34 வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூரை பெருமைப்பட வைத்த “நந்திதா” யார்?

Prasu
2 years ago
34 வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூரை பெருமைப்பட வைத்த “நந்திதா”  யார்?

முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக, சிங்கப்பூர் அழகி, நந்திதா பண்ணா மிஸ் யூனிவர்ஸ் போட்டியில், முதல் 16 போட்டியாளர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

80 அழகிகள் பங்குபெற்ற இந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியானது இஸ்ரேலில் உள்ள எயில்லாத் என்ற இடத்தில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இருபத்தி ஒரு வயது நிரம்பிய சிங்கப்பூர் அழகி நந்திதா பண்ணா முதல் 16 சுற்றுக்குள் நுழைந்தார். முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பாக , மேரியான் நிக்கோல் டியோ என்ற சிங்கப்பூர் அழகி மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

எனினும், இறுதியில் இந்தியாவை சேர்ந்த ஹர்னஸ் சந்து என்ற அழகி மிஸ் யுனிவர்ஸ் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அழகியும், பராகுவே நாட்டைச் சேர்ந்த அழகியும் இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே வென்றனர்.

சிங்கப்பூர் அழகி நந்திதாவின் வெற்றியைப் பற்றி மிஸ் சிங்கப்பூர் போட்டிகளில் இயக்குனர், மிஸ் வேலரி கிம் கூறுகையில், நந்திதா தமது 21 வது பிறந்தநாளை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடிய நிலையில் அவருடைய இந்த சாதனை மிகப் பெரியது என்றும், அவர் எப்போதும் ஒரு பரந்த மனப்பான்மை உடையவர் என்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அதிக ஆர்வம் காட்டுபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நந்திதா ரஃபேல்ஸ் கேர்ள்ஸ் ஸ்கூலில் பயின்றவர். தற்போது சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் யூனிவர்சிட்டியில் ஒரே நேரத்தில் மேனேஜ்மென்ட் மற்றும் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆகிய இரட்டை பட்டங்களை பெறுவதற்கு, மூன்றாமாண்டில் முனைப்புடன் பயின்று வருகின்றவர்.

2017 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் சாதித்து வரும் இவர், இந்த போட்டிக்காக தன்னுடைய நீண்ட கூந்தலையும் தியாகம் செய்துள்ளார். “பிக்சி கட்டு” என்று அழைக்கப்படும் ஹேர்கட் செய்து இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த பாணி அவருடைய ஆளுமையும் அம்சங்களையும் மிக அழகாக வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்த துணிச்சலான ஹேர்கட் செய்து கொள்வதற்கு முதலில் சிறிது தயங்கிய நந்திதா, தற்போது அவர் எடுத்த துணிச்சலான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் தேசிய உடையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடையை வடிவமைத்த பிரெட்ரிக் லி என்பவரின் ஆடையை அணிந்தும் இந்தப் போட்டிகளில் வலம்வந்தார்.

மேலும், விருது பெற்ற கலைஞர் லீ சின் லீயின் அவர்களின் வரைகலை அச்சு வடிவங்களும் இவரது உடையில் இடம்பெற்றுள்ளன. இந்த வரைகலை அச்சில் சிங்கப்பூரின் தனித்தன்மை வாய்ந்த கதைகளை ஒருங்கிணைத்து, வரைபடமாகவும், பழக்கமான அடையாளங்கள் முதல் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் வரையிலான நுணுக்கங்களை ஒன்றாக இணைத்தும் இவரது உடையை மிக அழகாக வடிவமைத்துள்ளார்.