வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை: பாதுகாப்பு செயலாளர்

#NorthernProvince #China
Mayoorikka
2 years ago
வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை: பாதுகாப்பு செயலாளர்

வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு கொடுக்கும் எந்தவித நோக்கமும் எமது அரசாங்கத்திடம் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

 நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையுடன் ஏதேனும் சர்வதேச உடன்படிக்கைகள் செய்துகொள்ளும் வேளையில் அந்த உடன்படிக்கை மூலமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து அரச அதிகாரிகளாகவும், இராணுவ அதிகாரிகளாகவும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரியாக இருக்கும் காலத்திலும் எமது கவனத்தை செலுத்திவருகின்றோம்.

இலங்கைக்கு சோபா, அக்ஸ்சா உடன்படிக்கைகள் கொண்டுவரப்பட்ட வேளையில் கூட, நாம் ஓய்வுபெற்ற அதிகாரியாக இருந்தும் அதற்கு எதிராக செயற்பட்டோம். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற விடயத்தை எடுத்துக்கூறினோம். அதனால் தான் குறித்த உடன்படிக்கைகள் செயற்பாட்டிற்கு வராதுபோனது.

இப்போதும் அரசாங்கம் கைச்சாத்திடும் சர்வதேச உடன்படிக்கைகள் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கின்ற பட்சத்தில் அவற்றை நாம் சுட்டிக்காட்டுவோம். ஆனால் இன்னமும் அவ்வாறான நிலைமையொன்று ஏற்படவில்லை. இந்த உடன்படிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த எமது ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்.

மேலும் வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவ்வாறு மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவது குறித்த எதிர்பார்ப்போ அல்லது வேலைத்திட்டமோ அரசாங்கத்திடம் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் எமது நாட்டிற்கு முதலீடுகள் அவசியம்.

நாடாக முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் வேறு நாடுகளின் முதலீடுகள் எமக்கு அவசியம். அதற்கமைய சூரிய வலுசக்தியை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் குறித்த பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உருவாக்க முடியும், அதற்கான முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்ற வேளையில் ஒரு சிலர் அதற்கான முதலீடுகளுக்கு இலங்கைக்கு வருகின்றனர் என்றால், அவ்வாறு வருபவர்களில் எமக்கு சாதகமான உள்ளவரை செய்ய வேண்டும்.

அவ்வாறு தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விளக்கப்படுத்தக்கூடாது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்படவில்லை என அவர் தெரிவித்தார்.