சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 18-12-2021

#history #International
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 18-12-2021

"புவியின் அனைத்து சாம்ராஜ்ஜியங்களிலும் சிதறிக் கிடப்பாய்" என்பது புகழ்பெற்ற ஹீப்ரு வாசகம். இன்று உலக நாடுகளில் வாழும் மக்கள்களில் பூர்வகுடிகளை மட்டுமே கொண்ட நாடு என ஒன்று தனியாக இருக்க வாய்ப்பில்லை. ஆதியில், கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள் தன் தேவைகளின் பொருட்டு பல திசைகளுக்குப் பயணித்தனர்.

அவ்விதம் பிரிந்ததன் தொடர்ச்சியே பல இனங்கள், பல நாடுகள். பின் வந்த காலங்களில் தேவையின் பொருட்டே மனிதர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும் வேண்டியிருந்தது. இது அனைவருக்கும் பொதுவானது. தமிழில்கூட 'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொல்லப்படுகிறது. அப்படி, பல்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் தொழில் ரீதியாகவும், இயற்கை பேரிடர் ரீதியாகவும், மற்றும் போர் காரணங்களாலும் தன் நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டை தேடி சென்று குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழவும் தொடங்குகிறார்கள்.

அவ்விதம் புலம் பெயர்ந்த மக்களுக்கான நாளாக டிசம்பர் 18-ம் தேதியை "புலம் பெயர்ந்தவர்களுக்கான தினம்" ஆக ஐ.நா.சபை கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4 -இல் அறிவித்தது. அது ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்படுகிறது.