இன்றைய வேத வசனம் 25.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 25.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஆதித் திருச்சபை நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அதிக உபத்திரவம் இருந்தது. எப்போது என்ன நடைபெறும் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால், அவர்களுக்குள் கிறிஸ்துவின் அன்பு நிலைபெற்றிருந்தது.

சவுல் வீடுகள் தோறும் நுழைந்து புருஷர்களையும், ஸ்திரிகளையும் இழுத்துக்கொண்டு போய் காவலில் போடுவித்து சபையை பாழாக்கிக்கொண்டிருந்தான் சிதறிப்போனவர்கள் எங்குந் திரிந்து சுவிசேஷ வசனத்தை பிரசங்கித்தார்கள்.

இதில் தெளிவாக ஒரு காரியத்தை பார்க்கலாம், சவுல் வீடுகள் தோறும் போய் பாழாக்குகிறான். ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிற இடங்களில் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். எவ்வளவு தைரியம் பாருங்கள். பாடுகள்தான் ஆனால் தைரியமாகத் தங்களை தேவனுக்கு அர்ப்பணித்தார்கள்.

மேலும் எபிரேயரில் ஒரு வார்த்தையைப் பார்க்கிறோம், ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; (எபிரேயர் 11:35)

இது அவர்களுக்குள் இருந்த விசுவாசத்தையும் தைரியத்தையும் கூறுகிறது. ஒருவருக்குள் தைரியம் வர வேண்டுமானால் விசுவாசம் அவசியம்.

ஆதித் திருச்சபையின் நாட்களில் பேதுரு கட்டப்பட்டு இருக்கையில் மரியாளின் வீட்டில் பேதுருவிற்க்காக இரவு முழுவதும் ஜெபிக்கிறார்கள்.

அப்பொழுது கர்த்தர் அவரை விடுவித்து விடுகிறார். பேதுரு வந்து வீட்டின் கதவை தட்டும்போது ரோதை என்கிற பெண் தைரியமாக ஒட்டுக்கேட்க வருகிறாள்.

பேதுருவின் சத்தத்தை கேட்டவுடன் உற்சாகத்தில் கதவை கூட திறக்கவில்லை உள்ளே ஓடிச்சென்று அறிவிக்கிறாள்.

இது எதைக் காண்பிக்கிறது தங்களது விசுவாசமுள்ள ஜெபத்தை கர்த்தர் கேட்டார் என்கிற விசுவாசத்தோடு தைரியமாக கதவண்டை வருகிறாள். எவ்வளவு பெரிய நிச்சயம் பாருங்கள்.

ஆம், கர்த்தருடைய பிள்ளைகளே அந்த சம்பவத்தில் பார்த்தால் பேதுரு  அங்கு தங்கவில்லை மாறாக தான் விடுதலை அடைந்தேன் என்பதை தெரிவிப்பதற்காக தான் அங்கு வந்தார்.

ஒருவேளை பேதுரு கதவை தட்டும் போது அவர்கள் திறக்காமல் இருந்திருந்தால், பேதுரு கடந்து போயிருப்பார். இவர்களும் சோர்ந்து போய் இருப்பார்கள். அவர்களது இதயத்திற்குள் கலக்கமும் பயமும்தான் இருந்திருக்கும்.

எனக்கு அன்பானவர்களே, இந்த கடைசி நாட்களில் நாம் தைரியமாக எதையும் மேற்கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும். நம்மோடு கூட கர்த்தர் இருக்கிறார். அவர் காரியங்களை பார்த்துக் கொள்வார்.

நாம் பயப்பட, பயப்பட பிசாசு அதனை காரணம் காட்டி நம்மை விசுவாசத்தில் வளர விடாமல் செய்து விடுவான். பயப்படாதிருங்கள் தைரியம் உள்ளவர்களாய் இருங்கள்.

கர்த்தர் நமக்கு ஏற்கனவே வாக்கு பண்ணியிருக்கிறார், பயப்படாதே சிறுமந்தையே நான் உன்னோடு கூட இருக்கிறேன். (ஏசாயா 43:5)

இன்று அநேகரை பாதித்த ஒரு காரியம் உண்டென்றால் அது பயம். பிசாசு ஜனங்களை பயமுறுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான்.

நாம் தைரியமாக அவனது சூழ்ச்சிகளை முறியடிப்போம். பிசாசு நம்மை மிரட்டி பார்ப்பான் நாம் தைரியமாக அவனை எதிர்க்கும் போது அவன் ஓடிப்போவான். கலங்காதிருங்கள் தைரியமாய் இருங்கள் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

ஆமென்!