29ஆம் திகதிக்கு பின்னர் தனியார் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுமா?

Prabha Praneetha
2 years ago
29ஆம் திகதிக்கு பின்னர் தனியார் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுமா?

கொரோனா தொற்றுத் தாக்கம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பால் நாடு முழுவதும் 50 வீதமான தனியார் பஸ்களே போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை எவ்வாறு மாறும் என்பதை தங்களால் ஊகிக்க முடியாதுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயவர்தன ‘தமிழன்’ நாளிதழிடம் நேற்று  தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ்களின் போக்குவரத்துகள் குறைவடைந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில், தனியார் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவது குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, நாடு முழுவதும் 18,000 தனியார் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதுடன், கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பால் 8,500 முதல் 9,000 வரையான தனியார் பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 20,000 தனியார் பஸ்கள் இருந்தாலும் 18,000 பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் போக்குவரத்தை கைவிட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மானியமற்ற எரிபொருள் விலை அதிகரிப்புகள் காரணமாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களிலும் குறைவான பஸ்களே அன்றாட போக்குவரத்துகளில் ஈடுபடுகின்றன.

சில வீதிகளில் ஒரு சில பஸ்களே பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு போக்குவரத்துகளை முன்னெடுப்பதற்கு தயாராயிருந்த நிலையில், எதிர்பாராத எரிபொருள் விலை அதிகரிப்பினால் தற்போது போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கும் பஸ்களிலும் எந்தளவான எண்ணிக்கைகள் தொடர்ந்தும் போக்குவரத்தில் ஈடுபடும் என்பதையும் தங்களால் ஊகிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பஸ்களின் பராமரிப்புகளுக்கு தேவையான வருமானத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கமைய, விலை அதிகரிப்புகளை முன்னெடுப்போம். எனினும், எவ்வளவு வீதத்தில் கட்டணத்தை அதிகரிப்பது என்பது குறித்து நாங்கள் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

விலை அதிகரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதால் எதிர்வரும் புதன்கிழமைக்கு பின்னர் போக்குவரத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பதையும் தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.