இலங்கையை உறைய வைக்கும் மரணங்கள்- அச்சத்தில் மக்கள்!

#SriLanka
Nila
2 years ago
 இலங்கையை உறைய வைக்கும் மரணங்கள்- அச்சத்தில் மக்கள்!

இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. இந்தச் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் தினந்தோறும் அரங்கேறும் வன்முறை வெறியாட்டங்கள் மக்கள் மத்தியில் விரக்தியை விதைத்து வருகிறது.

குறிப்பாக வடக்கு – கிழக்கில் மிக அண்மையில் இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்சியே இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

மட்டக்களப்பு நகரில் எஜமானியை வேலைக்காரி பணத்திற்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொலைக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு உண்மைகள் அம்பலமாகியுள்ளன.

எஜமானியின் தங்க நகையை நீண்டகாலமாக தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்தேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணையும் அவரது தந்தையையும் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனைக் கடை நடத்திவரும் நகைக்கடை வர்த்தகரான செல்வராசா என்பவரின் மனைவியான தயாவதியே இவ்வாறு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நகரின் நடுப்பகுதியில் அரசடி பார்வீதியில் அதிக சனநடமாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டிடம் கொண்ட வீட்டில் வசித்த தயாவதிக்கு 23 வயதுடைய மகளும் 26 வயதுடைய மகனும் உள்ளனர்.

இதுவொருபுறமிருக்க குற்றம்சாட்டப்பட்ட பெண் மலேஷியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியதுடன், இலங்கைக்கு வந்த அவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து 8 மாதங்களாக அங்கு வாழ்ந்து வருகின்றார்.

மேலும் இவர் அடிக்கடி முன்னர் வேலைசெய்த தனது எஜமானியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந் நிலையில் சம்பவதினமான கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கிக் கொள்ளவேண்டும் என திட்டமொன்றை வகுத்துள்ளார்.

அவரது கணவரிடம் கல்லாற்றுக்கு தனது தந்தையுடன் செல்வதாக தெரிவித்து, தந்தையிடம் தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபா பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என பொய்கூறி 48 வயதான தந்தையாரை அழைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கடை ஒன்றில் கோழிவெட்டுவதற்கு கத்தி ஒன்று தேவை எனக்கோரி கத்தி ஒன்றை வாங்கி தனது கைப்பையில் வைத்துக்கொண்டு பார்வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு முதலாளியின் கார் நிற்பதைக்கண்டு வீட்டுக்கு செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில்புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வர்த்தகர் செல்வராசா நகைக்கடைக்கு மகனை அனுப்பிவிட்டு அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு மனைவி மகளுடன் சென்று வந்த களைப்பில் சிறிது இளைப்பாறியுள்ளார்.

இந்நிலையில் மனைவி தயாவதி கோவிலுக்கு செல்லும்போது அணிந்துசென்ற தங்க ஆபரணங்களுடன் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது வெகுநாள் கனவை நிறைவேற்றிக்கொள்ள அங்கு வேலைக்காரியும் அவரது தந்தையும் சென்றுள்ளனர். அவர்களைக் கண்ட தயாவதி அவர்களை வரவேற்று கலந்துரையாடிய நிலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.

இதன்பின்னர் வர்த்தகர் செல்வராசாவும் அவரது மகளும் சாப்பிட்டுவிட்டு செல்வராசா வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்கச்சென்றுள்ளார். மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டுமண்டபத்தில் ஒரு பகுதியிலுள்ள சோபாவில் அமர்ந்துகொண்டு கையடக்கத் தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரைக்கு போயுள்ளார்.

அப்போது தயாவதி வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்டபின்னர் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வேலைக்காரியின் தந்தை வீட்டின் வெளியில் சென்றுள்ளார்.

எஜமானியின் நகைகளை கொள்ளையடிக்க தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்காரி, வீட்டின் முன்பகுதியில் இருந்த களஞ்சிய அறைக்கு தயாவதி செல்வதைக்கண்டு அவரை பின் தொடர்ந்துள்ளார். இவை எதையும் எதிர்பார்த்திராத தயாவதி தன்னை வெட்ட தனது கைப்பையில் வைத்திருந்த கத்தியை வேலைக்காரி எடுத்தபோது வேலைக்காரியை தள்ளி விட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட வேலைக்காரி தயாவதியை பிடித்து தள்ளிவிட அவர் கீழே தலைக்குப்புற வீழ்ந்து, அங்கிருந்த தேங்காயில் தலை அடிபட்டு கீழே கிடந்த தயாவதி சத்தம் போடாதவாறு கழுத்தைக் கத்தியால் சுமார் 10 தடவை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவான காணொலி தொகுப்புக்கள் அடங்கிய தடயப் பொருட்களை மீட்ட பொலிஸார், கைதுசெய்யப்பட்ட பெண் மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நகை, பணம் ஆடப்பர வாழ்வு மீது கொண்ட மோகம் காரணமான நடந்தேறிய இந்தக் கொடூரச் சம்பவத்தின் அதிர்ச்சியிருந்து கிழக்கு மக்கள் மீள்வதற்குள், அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி மக்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதேவேளை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை ஆராதனைகளில் நாட்டு மக்கள் ஈடுபட்டிருந்த இரவுப் பொழுதில் இடம்பெற்ற இந்தக் கொடூரச் சம்பவத்தின் சூத்திரதாரியான சார்ஜன்ட் பொலிஸ் நிலைய பிரதான நுழைவாயிலில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து சூடு நடத்தியதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கியால் பொலிஸ் நிலையத்திற்குள் இருந்த அதிகாரிகளை நோக்கி சுட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்காக வெளியேறிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீப்பில் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் ஜீப் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொரு அதிகாரியும் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான எத்திமலை பிரதேசத்திற்கு தனது தனிப்பட்ட கப் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் எத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி அவரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, விடுமுறை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த குறித்த சார்ஜன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசேட விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கறைப்பற்று நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதன் பின்னர் எத்திமலை பகுதியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் இதன்போது தனது பெற்றோருக்கு அவர் கூறியதாகவும் தாய் குறிப்பிட்டுள்ளார்.

காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்குச் சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு பொலிஸ் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நடந்தேறிய மேற்குறிப்பிட்ட இரண்டு கொடூரச் சம்பவங்கள் போன்று வடக்கில் முல்லைத்தீவு மூங்கிலாற்றில் 13 வயதுச் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் கைது கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன 13 வயதுச் சிறுமி 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறுமியின் அத்தான் கடந்த 22 ஆம் திகதி அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிசார் சிறுமியின் கொலை தொடர்பில் தாய், தந்தை, சிறுமியின் அக்கா ஆகியோரை கடந்த 23 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 48 மணத்தியாலங்கள் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்கு உட்படுத்தி வந்த நிலையில் நேற்று சந்தேக நபர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 04 ஆம்திகதி வரை விளக்கமயியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களுடன் நாள்தோறும் வீதி விபத்தில் உயிரிழப்பு, நீரில் முழ்கிப் பலியாதல், மர்ம மரணங்கள் என்று மக்களை துன்பத்தில் மூழ்கடித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொருந்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.