பிரதமராக பசில் பதவியேற்றால் ஏற்படப் போகும் ஆபத்து!

Prabha Praneetha
2 years ago
பிரதமராக பசில் பதவியேற்றால் ஏற்படப் போகும் ஆபத்து!

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடம் முதல் முறையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்  என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அவ்வாறு நிகழ்ந்தால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த 2 வருடகாலமாக நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளது. 

வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களும் கோவிட் தாக்கத்துடன் நிறைவடைந்தன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கோவிட் தாக்க சவாலுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வருடம் முதல் வாக்குறுதிகள் அனைத்தையும் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாகவுள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு அவசியமில்லை. நாட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தே 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்றால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும். யுகதனவி மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அவருக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சுமூகமான தன்மை கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், பிரதான ஆளும் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு இக்காலப்பகுதியிலாவது தீர்வு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்