இலங்கையில் வீதியில் குவியும் சடலங்கள் !

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் வீதியில் குவியும் சடலங்கள் !

இலங்கையில் நாளாந்தம் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள பெரும்பாலான மக்களுக்கு அரச தரப்பினரின் பதில் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இந்நிலையில் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திடீர் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டுப் பிறப்பன்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 15 இற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதியான இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீபன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்துக்குள்ளாகிய பிக்கப் வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த விடாது முற்றுகையிட்டு ஏ – 9 வீதியை மறித்தும் மரணித்த இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ -9 வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டது.

பொலிஸாரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போக சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

அத்துடன், நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். மக்களது போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்ததையடுத்து, அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், முறுகல் நிலை தீவிரமடைந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், மரணித்த இளைஞனுக்கு நீதி கிடைக்கும். சரியான முறையில் விசாரணை இடம்பெறும் என குறித்த இளைஞனின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு வாக்குறுதியளித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரினார்.

இரவு 11.50 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து, விபத்துக்குள்ளாகிய வாகனம் பொலிஸாரால் எகொண்டு செல்லப்பட்டது.

விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸாரர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவிலும் புத்தாண்டு தினத்தன்று ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. கேப்பாபுலவு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்தனர் என்றும்

இவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .

இதேவேளை, வனவாசலைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவை ஒன்றில் மோட்டார் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தைத் தொடர்ந்து மோட்டார் வாகனம் தீப்பிடித்து எரிந்ததுடன் அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி புகையிரத்துடன் மோட்டார் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதத்தில் மோதிய மோட்டார் வாகனம் சுமார் 200 மீற்றர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதில் தீப்பிடித்தது.

அதேவேளை, புகையிரதத்தின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இணைந்து அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பண்டாரகமவில் நடந்த கோர விபத்தில் இளம் காதலர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம – கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெஸ்பேவயில் இருந்து பண்டாரகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் பண்டாரகம வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆணும், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணும் என அடையாளம் காணப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்தனர் எனப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிலாபம், கரடியனாறு, பேராதனை, கடுகன்னாவ மற்றும் பியகம ஆகிய இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியன.

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் மெரவல பகுதியில் சிலாபம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மெரவல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடையவ ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேவேளை, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – செங்கலடி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரடியனாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் உயிரிழந்தார்.

இதேவேளை பேராதனை – கட்டுகஸ்தோட்டை வீதியில் கோரக்கதெனிய சந்திக்கு அருகில் பேராதனையிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கடுகன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயது யுவதி உயிரிழந்தார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று கண்டி ஊராபொல பிரதேசத்தில் பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பியகம – பண்டாரவத்தை மல்வான வீதியில் யபரலுவ பிரதேசத்தில் பண்டாரவத்தை நோக்கிச் சென்ற சிறிய லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில் யாழ். காரைநகர் – கசூரினா கடலில் நீராடிய போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

கோண்டாவில் தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான 17 வயது யோகராசா லோகீஸ்வரன் எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கோண்டாவிலிருந்து, புத்தாண்டு தினத்தன்று 20 பேர் காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அதனைப் பார்த்த ஏனையவர்கள், அவலக்குரல் எழுப்பியதையடுத்து அங்கிருந்தவர்கள் ஒருவரை மீட்டனர்.

மற்றையவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சுமார் நான்கு மணி நேர தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, பரந்தன் பகுதியில் புதுவருடத்தன்று போத்தலால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

28 வயதுடைய கார்த்தி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குற்றச் செயல் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்கள் தொடர்பான பின்னணி தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் வாங்கப் பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிபப் பெண்ணைக் கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுத்துண்டுகளைத் துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரிடமிருந்து ஒரு சோடி தோடு, ஒரு சோடி காப்பு, சங்கிலி ஒன்று, 2 மோதிரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் காணாமல் போயிருந்த வயோதிபப் பெண்ணின் சடலம்
அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் பாலமொன்றின் கீழ் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லண்டனில் மகனுடன் வசித்து வந்த 67 வயது இராசேந்திரம் இராசலட்சுமி என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்பினார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியிலுள்ள தனது காணியைப் பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தார்.

தனியாக வசித்து வந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் இளைஞன் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்கு கடந்த 26ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்த இளைஞருக்கும் அதே பகுதிக்கு படகின் மூலம் வந்த குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த இளைஞன் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பூநகரி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான நான்கு சந்தேக நபர்களையும் இம் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வேலைக்காரப் பெண்ணால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தனது தாயின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தயாவதியின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் எல்லா பட்டங்களும் அம்மாவுக்கு சேரவேண்டும் எனப் படித்தேன். ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்தச் சம்பவம் ஊடகம் மூலம் வெளிவந்தது. எனவே நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.

இது ஒரு படிப்பினை. எனவே இப்படியான சம்பவங்களை ஆறவிடாமல் அந்த இடத்திலேயே தண்டனை வழங்கினால் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும். குற்றவாளிகளுக்கும் ஒரு பயம் வரும்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர் அந்த இடத்திலே தண்டனையை வழங்குங்கள். அப்போது தான் நியாயம் கிடைக்கும்.

தாய் இல்லாமல் ஒரே ஒரு பெண் பிள்ளை படும் வேதனை ஒருவருக்கும் விளங்காது. நான் உயிருடன் இருப்பது அப்பாவுக்காக. அதேவேளை பல்கலைக்கழகத்துக்கு படிக்கப்போக முடியாது உள்ளது. என்ன நடக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என தயாவதியின் மகள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்