இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து

#R. Sampanthan
Prasu
2 years ago
 இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து


"இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை இன்று பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு இந்திய அரசும் இலங்கை அரசும் நிரந்தரமான தீர்வு காண வேண்டும். இலங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நீண்டகாலமாக எமது மீனவர்கள் தொழில் செய்யக்கூடிய வசதிகள் இல்லாத காரணத்தின் நிமிர்த்தம் இந்திய மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து - தொழில் செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்துள்ளனர். இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரேயொரு சக்தி இந்திய அரசுக்கே உண்டு.

இந்திய அரசு தமது நாட்டு மீனவர்கள் வேறு இடங்களில் தொழில் செய்வதற்கான உரிய ஒழுங்குகளைச் செய்தால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

ஆனபடியால் இலங்கை அரசு, இந்திய அரசுடன் பேசி இவ்விடயம் சம்பந்தமாக அவர்களுக்கு மாற்று வழியைக் காட்டி, இந்திய மீனவர்கள் இங்கு வராமல் வேறு இடங்களில் தொழில் செய்யும் வகையில் இந்தக் கருமத்தைக் கையாள வேண்டும்.

அதேவேளை, எமது மீனவர்களும் இங்கு சுதந்திரமாகச் தொழில் செய்வதற்கான வசதிகளை இலங்கை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களுக்குத் தொழில் ரீதியான உதவிகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும்.

நான் நினைக்கின்றேன் இது தொடர்பில் இரு நாட்டு மீனவர் சங்கங்களும் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தால் அதை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை இரு நாட்டு அரச தரப்பினரும் செய்வார்கள். எம்மால் இயன்ற உதவிகளையும் நாம் செய்வோம்" - என்றார்.