ஸ்டெல்த் கொரோனாவின் முக்கிய அறிகுறிகள் ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Keerthi
2 years ago
ஸ்டெல்த் கொரோனாவின் முக்கிய அறிகுறிகள் ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

BA.2 எனப்படும் stealth Omicron குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய வகை ஓமிக்ரானின் அறிகுறிகள் குறித்த வல்லுநர்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தொடங்கி அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்னும் எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஏனென்றால், கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரிட்டன், இந்தியா நாடுகளில் கண்டறியப்பட்ட ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தியது. இதேபோல கடந்த செப். மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிதாக ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. இது உலகெங்கும் அடுத்த அலையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கூட கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 3 லட்சம் வரை கூட சென்றது. அதன் பின்னர் இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) கண்டறியப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BA.2 அல்லது stealth Omicron எனப்படும் இந்த உருமாறிய கொரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஓமிக்ரானை போல இல்லை என்பதால் இதைக் கண்டறிவது சிரமமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமான BA.1 ஓமிக்ரானிலும் சரி, BA.2 ஓமிக்ரானிலும் சரி 32 ஸ்டிரெயின்கள் இருக்கிறது. இது தாண்டியும் கூட BA.2இல் கூடுதலாக 28 ஸ்டிரெயின்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பொதுவாக BA.1 வகையில் ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்காது. இதனால் ஓமிக்ரான் பாதிப்பை PCR சோதனையில் எளிதாகக் கண்டறியலாம். ஆனால், இந்த BA.2 ஓமிக்ரானில் டெல்டா கொரோனாவை போல எஸ் ஜீன் உள்ளதால் இதைக் கண்டறிவது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த புதுவகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட தகுந்த அளவு இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதிப்பே ஏற்படுகிறது.

மேலும், இது வேகமாகப் பரவலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த புதிய வகை ஓமிக்ரான் அறிகுறிகள் குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒர்ஜினல் ஓமிக்ரான் போது இருந்தே அதே அறிகுறிகள் தான் பெரும்பாலும் இதற்கும் உள்ளது. தொண்டை கரகரப்பு தான் இந்த ஸ்டெல்த் கொரோனாவின் முக்கிய அறிகுறியாக உள்ளது. மேலும், சிலருக்கு இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு போன்ற அறிகுறிகளும் தெரிவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மூக்கு ஒழுகுதல் தலைவலி, சோர்வு, தும்மல், உடல் வலி அறிகுறிகளும் பரவலாகக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தசை அல்லது உடல் வலி மற்றும் தலைவலியும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்ற அறிகுறிகளும் தென்படுகிறது. உதடு மற்றும் நகப்பகுதிகளில் நிறம் மாறுவதும் ஓமிக்ரான் கொரோனாவின் அறிகுறியாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா கொரோனா சமயத்தில் பரவலாக இருந்த வாசனை மற்றும் சுவை இழப்பு ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனாவில் அதிகம் இல்லை. இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான், ஒர்ஜினல் ஓமிக்ரானை காட்டிலும் வேகமாகப் பரவி வந்தாலும் கூட தீவிர பாதிப்பை எதுவும் ஏற்படுத்துவதில்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.