கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் அவசர நிலையை பிரகடனப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ

Nila
2 years ago
கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் அவசர நிலையை பிரகடனப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாட்டில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

போராட்டங்களுக்காக கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

கனடா எல்லையை கடக்கும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பாரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டவா பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அதன்படி போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லொறிகள் பறிமுதல் செய்யப்படும்.

ட்ரக்குகள் சார்ந்த கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். வாகனங்களின் காப்புறுதிகள் நிறுத்தி வைக்கப்படும்.

மேலும் போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவின் ஒட்டவா நகரை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் பிரம்மாண்ட அளவில் ட்ரக்குகளை கொண்டு அந்த நகர் முற்றுகையிடப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான ட்ரக்குகளுடன் சாரதிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு இலட்சம் எண்ணிக்கையிலான டிரக்குகள் இந்த முற்றுகையில் கலந்து கொண்டிருக்கலாம் என கூறப்பட்டது.

ஆயிரக்கணக்கான டிரக்குகள் மைல் கணக்கில் நெடுஞ்சாலைகளில் வரிசைகட்டி நின்றது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்தது.

இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என விசாரிக்க தற்போது கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த போராட்ட ஒருங்கிணைப்புக்காக மில்லியன் கணக்கிலான டாலர்கள் நிதி திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

1970ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

முன்னதாக கனடாவின் Quebec மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக அப்போதைய கனடா பிரதமர் பியரே ட்ரூடோ அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

இவர் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.