புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வது குறித்து மேலும் விவாதம் தேவை

#SriLanka #worship #Sri Lanka President
புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வது குறித்து மேலும் விவாதம் தேவை

புதிய வழிபாட்டுத் தலங்களை பதிவு செய்வது தொடர்பில் உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னர் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்வது முக்கியம் என ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசனைக் குழு 13வது தடவையாக கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது.

புதிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்தல் மற்றும் பராமரித்தல், ஞாயிறு தம்ம பாடசாலைகளை நடாத்துதல், சொற்பொழிவு மற்றும் ஆலயங்கள் சட்டம், வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்தல், தொல்லியல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. .

புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு மதம் தொடர்பாகவும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தனித்தனியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என விவாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பிரிவின் மகாநாயக்க தேரர் மற்றும் பிராந்திய சசனரக்ஷக பலமண்டல தேரரின் பரிந்துரையின் பேரில் பௌத்த விகாரைகளை பதிவு செய்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் சிபாரிசு மற்றும் மேற்பார்வையின் கீழ், தொல்பொருட்களுடன் கூடிய விகாரைகளின் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொல்பொருள் ஆணையாளர் நாயகம் அனுர மனதுங்க, தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் எதிர்வரும் சில மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆலோசனை சபை உறுப்பினர்கள், மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.