தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 2019 ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் தலைமையிலும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலும் இரு அணிகள் நேர் எதிராக தேர்தலை சந்தித்தது. முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தியதால், தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார், அதுவரை அரசு நியமித்த தனி அதிகாரி சங்கத்தை நிர்வகிப்பார் என உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் சங்கம், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மீதான வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2019ல் நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் நடத்த தேவையில்லை என்றும் தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.