ரஷ்யா- உக்ரைன் மோதல்: இதுவரை 137 பேர் பலி! 316 பேர் படு காயம்
ரஷ்யா தாக்குதலால் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷ்யா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள், அமைதியான நகரங்களை ராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 90 நாட்களுக்குள் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான நிதியை ஒதுக்குமாறும் உக்ரைன் அமைச்சரவையை ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார். ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்கத் அனைத்து மக்களும் முன்வர வேண்டும் என்றும் ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.