ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழப்பு..!! உக்ரைன் அதிபர் உருக்கம்

#world_news #Ukraine #Russia
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழப்பு..!! உக்ரைன் அதிபர் உருக்கம்

உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய ரஷிய அதிபர் புதின் அதிரடியாக போர் பிரகடனம் செய்தார். அப்போது மாஸ்கோ நேரம், நேற்று அதிகாலை 5.55 மணி. தொடர்ந்து “வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின. அப்பொது கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. பல நகரங்களில் ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

கீவ் பிராந்தியத்தின் வடக்கே ரஷிய படைகள் புகுந்தன. ஒடேசா பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் மட்டும் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  கீவ் நகரை அடுத்துள்ள புரோவாரி நகரில் தொடர்ந்து ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கீவ், கார்கிவ், ஒடேசா மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பிற்பகலில் கீவ் நகருக்கு சற்று வெளியே ஹோஸ்டோமலில் உள்ள ஆண்டனோவ் சர்வதேச விமான நிலையத்தின்மீது ரஷியா கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அங்கு ரஷியாவின் எம்.ஐ. 8 ரக ஹெலிகாப்டர்கள் டஜன்கணக்கில் செயல்பட்டதை வீடியோ காட்சிகள் காட்டின.

ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும். மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.

நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். உக்ரைன் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது.

நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்திருந்தன. 

தலைநகரம் கீவ் உள்பட எங்கு பார்த்தாலும் ஏவுகணை தாக்குதலும், குண்டுமழையும் ஒரு சேரப்பொழிந்து வருவதால் உக்ரைன் மக்கள், தங்கள் உயிரைக்காக்க பரிதவித்தவாறு வெளியேறத்தொடங்கி விட்டனர். 

இந்நிலையில் ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், “ரஷியப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ரஷிய படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும் என்றும் ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

ரஷிய தரப்பில் சேதமே இல்லையா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!