பணக்கார நாடுகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் உக்ரைன் - உக்ரைன் பற்றிய வரலாற்று பதிவு

Prasu
2 years ago
பணக்கார நாடுகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் உக்ரைன் - உக்ரைன் பற்றிய வரலாற்று பதிவு

பணக்கார நாடுகள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். வறுமைக்கோட்டுக்குக் கீழே நிறைய பேர் வசிக்கும் ஐரோப்பிய நாடு. பனியும் குளிரும் சூழ்ந்த ஐரோப்பாவில் அதிகமான விவசாய நிலங்கள் இருக்கும் நாடும் இதுதான்.

ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு இதுதான். நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்தப் பெரிய தேசத்தை ரஷ்யா விழுங்கப் பார்ப்பதுதான் தற்போது உலகின் தலைப்புச் செய்தி.

உண்மையில் உக்ரைன் தேசத்துக்கு மாபெரும் வரலாறு உண்டு. ரஷ்யாவுக்கு அந்தப் பெயரைக் கொடுத்ததே உக்ரைன் பேரரசுதான்.

- வைக்கிங் பேரரசு!

தமிழகத்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த அதே காலகட்டத்தில் கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்கால உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ், அப்போது அந்தப் பேரரசின் தலைநகராக இருந்தது.

ஐரோப்பாவின் வலிமை வாய்ந்த தேசமாக அப்போது கீவியன் ரஸ் செல்வாக்கு செலுத்தியது. தற்போதைய உக்ரைன், பெலாரஸ், போலந்து மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. ஹாலிவுட் வரலாற்றுப் படங்களில் வைக்கிங் பேரரசர்களைக் காட்டுவார்கள். அப்படி ஒரு ராஜ பரம்பரையின் ஆட்சியில் கீவியன் ரஸ் பேரரசின் பொற்காலம் இருந்தது.

விளாடிமிர் தி கிரேட், அந்தப் பேரரசின் புகழ்பெற்ற அரசர். கீவியன் ரஸ் பேரரசின் பெயரிலிருந்தே ரஷ்யா தன் பெயரைப் பெற்றது. 13-ம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு அந்தப் பேரரசை வீழ்த்தியது. தலைநகர் கீவ், அந்தப் போரில் தரைமட்டமானது.

அதன்பின் போலந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் மன்னர்கள் உக்ரைனைப் பங்கு பிரித்துக்கொண்டார்கள். நாட்டின் பெரும்பகுதி போலந்து வசம்போக, அதை எதிர்த்து உக்ரைன் மக்கள் கிளர்ச்சி செய்தனர். 'கொசாக் கிளர்ச்சி' என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் இந்த உரிமைப் போரில் பல்லாயிரம் பேர் இறந்தனர். இதை சாதகமாக வைத்துக்கொண்டு, உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய மன்னர்கள் ஆக்கிரமித்தனர்.

உக்ரைன் மண்ணில் ரஷ்யர்கள் பலர் வந்து குடியேறினர். கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் மொழியை அழிக்கும் முயற்சியும் அப்போது நடந்தது.

முதல் உலகப் போரில் ரஷ்யப் பேரரசும் போலந்து பேரரசும் பெரும் அழிவை சந்தித்தன. அதே நேரத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சி, அங்கு மன்னராட்சியை வீழ்த்தியது. அந்த நேரத்தில் உக்ரைன் தலைவர்கள் சிலர் இணைந்து, தனி நாட்டை உருவாக்கினர். உக்ரைன் மக்கள் குடியரசு இப்படி 1918-ம் ஆண்டு தனி நாடாக உருவானது.

பல நாடுகளிடம் சிக்கியிருக்கும் உக்ரைன் நிலங்களை மீட்க இது உதவும் என்பதால், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முயற்சியை ஆதரித்தது. ஆனால், உக்ரைனில் இருந்த ரஷ்ய மன்னரின் ஆதரவாளர்களுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூண்டது. ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட இந்தப் போரால் உக்ரைனில் மூன்று ஆண்டுகள் ரத்த ஆறு ஓடியது. கடைசியில் கிழக்கு உக்ரைன் பிரதேசம் முழுக்க சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் வந்தது. மேற்கு உக்ரைனை போலந்து ஆக்கிரமித்துக்கொண்டது

போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் 'உக்ரைன்' என்ற வார்த்தையை உச்சரிக்கவே தடை விதிக்கப்பட்டது. அரசு நடைமுறைகள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உக்ரைன் மொழியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உக்ரைன் இன மக்கள் போராடினர். முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள் பலரும் ஆயுதம் ஏந்திப் போர் நடத்தினர்.

1939-ம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படைகள் போலந்தை தாக்கின. அதேநேரத்தில் சோவியத் ரஷ்யாவும் போலந்து மீது போர் தொடுத்தது. இரண்டு நாடுகளும் போலந்தை பங்கு பிரித்துக்கொண்டன. போலந்தின் வசமிருந்த உக்ரைன் பகுதிகள் எல்லாம் சோவியத் வசம் வந்தன.

வரலாற்றில் முதல் முறையாக உக்ரைன் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசம் முழுக்க ஒன்றானது. உக்ரைன் மக்கள் மகிழ்ந்தனர். ஆனால், அதுதான் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்பதும், போரில் உக்ரைன் பேரழிவைச் சந்திக்கப் போகிறது என்பதும் அப்போது அவர்களுக்குத் தெரியாது.

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவின் பல பகுதிகளை வசப்படுத்திய ஹிட்லரின் ஜெர்மனி படைகள் அப்படியே ரஷ்யா மீது தாக்குதல் தொடுத்தன. 1941 ஜூன் மாதம் ஆரம்பித்த அந்தப் போரில் இரண்டு ஆண்டுகள் உக்ரைன் பிரதேசமே உக்கிரமான தாக்குதலைச் சந்தித்தது. இன்றைய உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட, சோவியத் படைகள் அவர்களை எதிர்த்துப் போரிட்டன.

எல்லா இடங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்துவந்த ஹிட்லரின் படைகளுக்கு வீழாத ஹீரோ நகரமாக கீவ் பெயர் பெற்றது. இரண்டு ஆண்டுகள் போர் புரிந்தும் அந்த நகரை ஹிட்லரின் நாஜி படைகளால் ஆக்கிரமிக்க முடியவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கிழக்கு உக்ரைன் மக்கள் சோவியத் ராணுவத்துடன் இணைந்து ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். மேற்கு உக்ரைனில் இந்த நேரத்தில் உக்ரைன் போராளிப் படை, உக்ரைனிய தேசியவாத அமைப்பு என்ற இரண்டு புதுக் குழுக்கள் உருவாகின. ஹிட்லரின் உதவியுடன் போலந்து மற்றும் ரஷ்ய நாடுகளை வீழ்த்திவிட்டு சுதந்திர உக்ரைன் தேசத்தை உருவாக்கலாம் என்று இவர்கள் கனவு கண்டனர்.

இவர்களில் ஒரு பிரிவினர் நாஜி படையுடன் இணைந்து ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக மோதினர். இன்னொரு பக்கம், 'உக்ரைன் மண்ணிலிருந்து போலந்து மக்கள் வெளியேற வேண்டும்' என்றும் கெடு விதித்தனர்.

தன்னை நம்பிய உக்ரைன் மக்களுக்கு, தானும் ஓர் ஆக்கிரமிப்பாளர்தான் என்பதை சீக்கிரமே உணர்த்தினார் ஹிட்லர். வளமான உக்ரைன் நிலங்களில் ஜெர்மானியர்களைக் குடியமர்த்தினார். உள்ளூர் மக்கள் அடக்குமுறைக்கு ஆளானார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபிறகுதான் உக்ரைனில் அமைதி திரும்பியது. அந்தப் போரில் உக்ரைன் பிரதேசத்தில் மட்டுமே 60 லட்சம் பேர் இறந்தனர்.

போரால் 700 நகரங்களும் 28 ஆயிரம் கிராமங்களும் சிதைந்து போயிருந்தன. போர் முடிந்த உடனே பஞ்சமும் வந்தது. அதிலும் பல ஆயிரம் பேர் இறந்தனர்.உக்ரைனில் மரணத்தைப் பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த பஞ்சத்தை ஒரு காரணமாக வைத்து, உக்ரைனில் இருந்த மக்களில் பலரை சைபீரியப் பிரதேசத்துக்கு அனுப்பினார் ஸ்டாலின். அந்த இடங்களில் ரஷ்யர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினார். இப்படித்தான் உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கம் நிறுவப்பட்டது.

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனில் ஆட்சிக்கு வந்தார் நிகிதா குருசேவ். உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர் என்பதால், அவருக்கு உக்ரைன் பற்றி சகலமும் தெரியும். அதனால் உக்ரைனை வளர்க்க முயன்றார். இரும்புத்தாதும் நிலக்கரியும் அதிகம் இருக்கும் பகுதி என்பதால், வேகமான தொழில் வளர்ச்சி வந்தது. வேலைவாய்ப்பு பெருகியது. ஒருகட்டத்தில் ஐரோப்பாவிலேயே பெரிய தொழில் மையமாக உக்ரைன் இருந்தது.

ரஷ்யாவுக்குத் தேவையான ஆயுதங்களும் அணு ஆயுத முயற்சிகளும் இங்குதான் நடைபெற்றன. சோவியத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் பலர் உக்ரைனில் உருவானார்கள். சோவியத் ஆட்சி அதிகாரத்தில் முக்கியமான இடத்துக்குப் பலர் வந்தார்கள். குருசேவுக்குப் பிறகு சோவியத் யூனியனை ஆட்சி செய்த பிரஷ்னேவ் இங்கிருந்து சென்றவர்தான்.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனி நாடாக உருவானது. பல தலைமுறைகளுக்கு முன்பாக அவர்கள் விரும்பிய விடுதலை கிடைத்தது. சோவியத் யூனியனிலிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட ராணுவம் உக்ரைனுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அணு ஆயுதங்களும் கூடவே வந்தன. ஒரே நாளில் உக்ரைன், உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது வல்லரசாக மாறியது.