ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்து பாலத்தை உடைத்த உக்ரைன் ராணுவ வீரர்

Prasu
2 years ago
ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்து பாலத்தை உடைத்த   உக்ரைன் ராணுவ வீரர்

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைவதை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து பாலத்தை தகர்த்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் ராணுவ வீரரான விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் கிரிமியா மற்றும் உக்ரைன் நிலப்பரப்பை இணைக்கும் முக்கிய இடமான பாலம் அருகே ரஷிய படைகள் நுழைந்து வருவதை கண்டு தப்பிக்க நேரமில்லை என சக வீரர்களிடம் கூறியுள்ளார். பின் அங்கு வெடி குண்டுகளை வைத்து தன்னைத் தானே வெடிக்கச் செய்து பாலத்தை தகர்த்தியுள்ளார். இதன்மூலம் பாலத்தின் அருகே ரஷிய படை வீரர்களின் மரணத்தை உக்ரைனின் ஆயுதப்படைகள் உறுதி செய்தன.

உக்ரைன் வீரரின் செயலால் ரஷியர்கள் நுழைவதை பின்தங்க வைத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.