இந்தியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை.. சர்வதேச விண்வெளி மையம் விழும்..!

Keerthi
2 years ago
இந்தியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை.. சர்வதேச விண்வெளி மையம் விழும்..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதனால், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரஷ்ய விண்வெளித்துறை சார்ந்த நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.

இதற்கிடையில், சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

சர்வதேச விண்வெளி மையத்தின் இயக்கத்தை கண்காணிப்பது, விண்வெளி மையம் பூமிக்கு மிக அருகில் வராமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுக்கும்பட்சத்தில் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷ்ய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளித்துறையில் பின்னடைவை ஏற்படுத்தும்.

நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பு தர மறுத்தால், கட்டுப்பாடு இல்லாமல் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது பாகங்களாக விழும் சர்வதேச விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது?

500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பகுதி இந்தியா மற்றும் சீனா மீது விழ வாய்ப்பு உள்ளது. நீங்கள் அவர்களை இவ்வாறு மிரட்ட விரும்புகிறீர்களா? சர்வதேச விண்வெளி மையம் ரஷ்யாவுக்கு மேல் பறக்கவில்லை.

ஆகையால், அனைத்து ஆபத்துகளும் உங்களுக்குதான். நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா? சர்வதேச விண்வெளி மையத்துடனான எங்களின் ஒத்துழைப்பை அழிக்க விரும்புகிறீர்களா?" எனத் தெரிவித்துள்ளார்.