உலக நாடுகளை அதிர வைத்திருக்கும் உக்ரைன் ரஷியா போர் - ஸ்விப்ட் வங்கி முறையில் இருந்து ரஷியா நீக்கம்

Reha
2 years ago
உலக நாடுகளை அதிர வைத்திருக்கும் உக்ரைன் ரஷியா போர் - ஸ்விப்ட் வங்கி முறையில் இருந்து ரஷியா நீக்கம்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா திணித்துள்ள போர், உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்திருக்கிறது. பெருத்த தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது.உக்ரைனை உலுக்கி இருக்கிற ரஷியாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தைக்கூட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்ற முடியாத பரிதாபம் நேர்ந்திருக்கிறது. இந்தப் போரால் உக்ரைனில் இருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் அண்டை நாடான போலந்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 4-ஆம் நாளாக நீடித்து வருகிறது. 

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் “ஸ்விப்ட்” வங்கி பரிவர்த்தனை முறையில் இருந்து ரஷிய வங்கிகளை நீக்கம் செய்துள்ளது. சுமார் 200 நாடுகளில் உள்ள 11,000 நிதி நிறுவனங்களால் ‘ஸ்விஃப்ட்’ பயன்படுத்தப்படுகிறது.  இந்த வங்கி முறையில் இருந்து ரஷியா நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் பண பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட ஏற்றுமதிக்கு ரஷிய பணம் பெறுவது தாமதம் ஆகும். இருப்பினும் பிற அமைப்புகள் மூலம் பணம் பெற ரஷியா முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பாக சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையிலான கட்டண முறையை ரஷியா பயன்படுத்தலாம் எனத்தெரிகிறது.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் ரஷ்யாவின் மத்திய வங்கியின் மீது கட்டுப்பாடுகளை விதித்து ரூபிளை ஆதரிப்பதற்கும் அவரது போர் முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கும் அதன் திறனைக் கட்டுப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். உலக பரிவர்த்தனை அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் வங்கிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஒருவர் ரஷ்ய வங்கிச் சந்தையில் 70% பாதிக்கப்படும் என்று கூறினார்.