உக்ரைன் குழந்தைகளுக்கு அமைதி தேவை! - நடிகை எமி ஜாக்சன் உருக்கமான பதிவு
உக்ரைனுக்கு உதவக்கோரி பல்வேறு நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏஞ்சலினா ஜோலி, பிரியங்கா சோப்ரா என நடிகர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது நடிகை எமி ஜாக்சனும் சேர்ந்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் படங்கள் மற்றும் வீடியோ கிளிப்பை வெளியிட்ட அவர், அந்தப் புகைப்படத்தில் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தற்காலிக வெடிகுண்டிலிருந்து பாதுகாப்பாகத் தங்கும் பாம் ஷெல்டர்களுக்கு மாற்றப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
'ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையின் கட்டிடத்தின் கீழ் மட்டத்தில் இந்த ஷெல்டர்கள் இருந்ததாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது. 'அவசரமாக இப்போது உக்ரைன் குழந்தைகளுக்கு அமைதி தேவை' என்று ஒரு படத்தை வெளியிட்டு, எமி ஜாக்சன் அதற்குக் கருத்துப் பதிவிட்டுள்ளார். மேலும், 'உக்ரைனின் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் உக்ரைன் மக்களாகிய உங்களுடன் இருக்கிறோம். உக்ரைன மக்களுக்கு அவசர நிதி தேவை. எனது பயோவில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து நன்கொடை அளிக்கவும்." என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எமி தனது மகன் ஆண்ட்ரியஸ் குறித்த பதிவுகளையும் பிள்ளைகளை வளர்ப்பது குறித்தும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். ஒரு தாய் என்கிற அடிப்படையில் அவர் பொறுப்புணர்வோடு கோரிக்கை வைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.