விமானங்கள் பறக்க தடை கோரிய உக்ரைன்: நேட்டோ மறுப்பு! கடும் கண்டனம் வெளியிட்ட அதிபர்
ரஷ்ய படைகள் தரைவழி, வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை என நேட்டோ அறிவித்தால் பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எவ்வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக் கூடாது. இது ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். தடையை மீறும் எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம். ஆனால், உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.
இந்நிலையில், தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்