அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தங்க அனுமதி: ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு

Keerthi
2 years ago
அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தங்க அனுமதி: ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு

ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு படையெடுத்துள்ளார்கள்.

இந்த நெருக்கடியான தருணத்தில் அமெரிக்காவில் உள்ள உக்ரைன் மக்களுக்கு ஜோ பைடன் நிர்வாகம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி அலெஜாண்ட்ரோ என்.மயோர்காஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை எனப்படும் மத்திய திட்டத்தின்கீழ் 18 மாதங்கள் தங்கிக்கொள்ளலாம்.

இந்த பாதுகாப்பு தகுதி பெறுவதற்கு தனிநபர்கள் குறைந்தபட்சம் கடந்த 1-ந் தேதி முதல் அங்கிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த திட்டத்தினால் 30 ஆயிரம் உக்ரைனியர்கள் பலன் அடைவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த திட்டத்தை செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் சூமர் பாராட்டினார். இதுபற்றி அவர் கூறுகையில், “உலகமெங்கும் உக்ரைனியர்கள், தங்கள் நாட்டில் அதிபர் புதினின் முன்கூட்டிய திட்டமிட்ட தூண்டுதலற்ற படையெடுப்பால் ஏற்பட்ட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலையை அனுபவிக்கின்றனர். அமெரிக்காவில் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்ததற்கு ஜனாதிபதி ஜோ பைடனை நான் பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவுக்கு ஏற்கனவே அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போது ரஷிய அதிபர் புதினின் பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 50 அரசியல் செல்வாக்குள்ள தொழில் அதிபர்களுக்கு அமெரிக்காவில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியதாவது:-

“ரஷியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் உள்பட டஜன் கணக்கிலானவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவில் பயணம் செய்வதை நான் தடை செய்கிறேன்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “ ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரைச்சுற்றியுள்ள அனைவருக்கும் கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா தொடர்ந்து விதித்து வருகிறது. தொழில்நுட்ப அணுகலை தடுக்கிறது. உலகளாவிய நிதி அமைப்புகள் அணுகலை துண்டிக்கிறது. இது ஏற்கனவே பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என குறிப்பிட்டார்.

இப்போது பயண தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் அமெரிக்க நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.