நான்கு ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதித்த சிங்கப்பூர்
உக்ரேன் மீது படை எடுத்துள்ள ரஷ்யா வின் பொருளியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், நான்கு ரஷ்ய வங்கிகளுக்கு சிங்கப்பூர் தடைகளை விதிக் கிறது. குறிப்பிட்ட சில ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் செயல்படும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ரஷ்யாவின் வங்கிகளுடன், அந்தத் தடை காரணமாக தொழில்களில் ஈடுபட முடியாது. மின்னணு, கணினி, ராணுவப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை வரும்.
உக்ரேன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷ்யாவை, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கண்டித்து இருக்கின்றன.
ரஷ்யாவுக்கான சிங்கப்பூர் தடைகள் தொடர்பான மேல்விவரங்களை வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 5) தெரிவித்தது.
“இந்தத் தடைகளும் கட்டுப்பாடுகளும் உக்ரேன் மீது போர் தொடுத்து அதன் இறையாண்மையைக் கீழறுப்பதற்கான ரஷ்யாவின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும்,” என்று அமைச்சு தெரிவித்தது.