பதினெண் சித்தர்களுள் ஒருவராக கருதப்படும் கமலமுனி சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 08)
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது
சித்தர்களின் தாய் வீடான சதுரகிரியில் பாம்பாட்டிச் சித்தரும், இடைக்காட்டுச் சித்தரும் ஆனந்தமாக சுற்றி சுற்றி வந்தனர். அப்போதுதான் உலகோர் தொழும் கௌசிக மாமுனியை கண்டனர். தரிசித்த கணத்திலேயே தங்களை மறந்து அவர் பாதம் படர்ந்தனர். தம்மளவில் பெருஞ்சித்தர்களாக இருந்தாலும் கௌசிக மாமுனி போன்றோர் வரும்போது நமஸ்கரித்தல் என்பது ஞானிகளுக்குத்தான் சாத்தியமாகும். ஆஹா, பாம்பாட்டி சித்தரே நமஸ்கரிக்கிறார் எனில் அவர் எத்தகைய ஞான புருஷராக இருப்பார் என்று மற்ற எல்லோரும் அவரை தரிசிப்பார்கள்.மேலும், ஞானி ஒருவரால்தான் இன்னொரு ஞானியை அறிய முடியும். இல்லையெனில் நாமே இவர் ஞானி, அவர் ஞானி என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இன்று வரையிலும் பாரத தேசத்தில் வாழ்ந்த ஞானிகளை, மற்றொரு ஞானி சொல்லித்தான் நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இந்த இரு சித்தர்களும் கௌசிக முனிவரை வணங்கி எழுந்து பணிவாக நின்றனர். ‘‘என்னால் தாங்கள் இருவருக்கும் என்ன உதவி செய்யக்கூடும்” என்று கௌசிக முனிவர் கேட்டார்.‘‘தங்களைப் போன்ற உயர்ந்த ஞானிகளிடம் உபதேசம் மட்டுமே வேண்டுகிறோம்” என்று அவர்கள் அமைதியாக பதிலளித்தனர். ஞானிகளைக் கண்டால் என்ன கேட்க வேண்டும் என்று இவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
உலகியல் பொருட்களை எது கேட்டாலும் அது மீண்டும் ஜீவனை உலக மாயையில்தான் தள்ளும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே உபதேசம் செய்யுங்கள் என்று அவர்கள் வேண்டிக்கொண்டபோது கௌசிகனார் உற்றுப் பார்த்து, மெல்லிய குரலில் உபதேசம் ஈந்தார். குருவின் வாக்குகளோடு, சக்தியும் சேர்ந்து அவர்கள் இருவருக்குள்ளும் கலந்தது. குருவிற்கு கைங்கரியம் செய்வது என்பது அவர் கூடவேயிருந்து சிறு சிறு வேலைகள் செய்வதோடு முடிந்து போவதில்லை. குரு காட்டிய வழியில், அவர் உபதேசித்த மார்க்கத்தில் ஈடுபட்டு நடத்தலே ஆகும். உண்மையான குரு தன்நிலைக்குத்தான் சீடர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அதற்காக சீடனை சோதித்தாவது சேர்த்துக் கொள்கிறார். ஏனெனில் நான் எனும் அகந்தையை வருடிக் கொடுத்தால் அதீதமாக வளரும்.