ஸ்ரீ பாத யாத்ரீகர்கள் குழு மீது குளவி தாக்குதல்.. சுமார் 50 பேர் வைத்தியசாலையில்

Prathees
2 years ago
ஸ்ரீ பாத யாத்ரீகர்கள் குழு மீது குளவி தாக்குதல்.. சுமார் 50 பேர் வைத்தியசாலையில்

ஸ்ரீ பாத யாத்திரை சென்ற  யாத்ரீகர்கள் குழுவிற்கு கடந்த 16ஆம் திகதி பிற்பகல் குளவி கொட்டியதில் காயமடைந்த சுமார் 50 பேர் சிகிச்சை பெறுவதற்காக நோர்டன்பிரிட்ஜ் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், ஆபத்தான நோயாளர்களில் சுமார் 30 பேர் வட்டவளை பிராந்திய வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பிராந்திய வைத்தியசாலையின் டொக்டர் பி.சி.டி சொய்சா தெரிவித்தார்.

இவர்கள் அனுராதபுரத்தில் இருந்து ஸ்ரீ பாத யாத்திரையாக வந்தவர்கள் எனத்தெரிவிக்கப்படுகிறது. 

நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திலிருந்து களனி ஆற்றில் கலக்கும் கெசல்கமு ஓயாவில் குளித்துக்கொண்டிருந்தபோது,  கடந்த 16ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை அங்கு நின்ற நபரொருவர்  கல்லால் தாக்கிய போது குளவிகள் அக்குழுவை தாக்கியதாக வைத்தியர் தெரிவித்தார்.

குளவி தாக்கியதில் காயமடைந்தவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் காயமடைந்தவர்கள் இராணுவத்தின் உதவியுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோர்டன்பிரிட்ஜ் பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

குளவி தாக்குதல் தொடர்பில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.