இறைச்சி, மீன் சாப்பிட எங்களுக்கு ஆசை - குடும்பத்தினருக்காக பலாக்காய் பறிக்கும் 9 வயது சிறுவன்
இரத்தினபுரிய காவத்தை ஹெந்தகான பிரதேசத்தில் தனது ஆறு சகோதர, சகோதரிகளுக்காக தினமும் பலா மரத்தில் எறி பலாக்காய் பறிக்கும் 9 வயதான சகோதரன் பற்றி செய்தி வெளியாகியுள்ளது.
இந்த 9 வயது சிறுவன் பலா மரத்தில் ஏறி, பலாக்காயை பறித்து வந்து கொடுத்த பின்னர், அதில் தாய் உப்பிட்டு சமைத்து மூன்று வேளையும் பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுத்து வருகிறார்.
இந்த குடும்பத்தின் தந்தை இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் தமது பாடசாலை கல்வியை இடையில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி கூறியுள்ள சசின் தினேஷ் என்ற அந்த சிறுவன்,
"சகோதர்களும், சகோதரிகளும் பசி என்று கூறும் போது நான் பலா மரத்தில் ஏறி பலாக்காயை பறித்து அம்மாவிடம் கொடுப்பேன், அம்மா அதனை அவித்து கொடுப்பார். அதையே நாங்கள் சாப்பிடுவோம்.
இறைச்சி, மீன் போன்றவற்றை உண்பதில்லை. எமக்கு அவற்றை சாப்பிட ஆசை, ஆனால், கொண்டு வந்து கொடுப்பதற்கு எவரும் இல்லை. நாங்கள் கிடைக்கும் பலாக்காயை சாப்பிட்டு விட்டு இருப்போம்"என தெரிவித்துள்ளார்.
மிகவும் வறிய நிலைமையில் வாழ்ந்து வரும் இந்த குடும்பத்திற்கு ஒரு வேளை உணவை தேடிக்கொள்வதிலும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றது. இதன் காரணமாக இந்த சிறுவன் பலாக்காயை பறிந்து தமது சகோதர, சகோதரிகளின் பசியை போக்கி வருகிறார். மழைக் காலங்களில் வீட்டின் கூரையில் தண்ணீர் ஒழுகும் என்பதால், பலாக்காயை சமைப்பதும் சிரமமான காரியம்.
இந்த பிள்ளைகள் உணவை சாப்பிடும் நேரங்களை விட பட்டினியில் அதிகமான நேரம் இருக்கின்றனர். இந்த குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மூன்று பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.
இவர்களுக்கு வசிப்பதற்கு நிரந்தர வீடு இல்லை. தற்போது குடியிருக்கும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை. இருக்க இடம் இல்லை என்பதால், ஒரு இடத்தில் வீடு ஒன்றை கட்டிக்கொண்டு வசித்து வருவதாக தாய் கூறியுள்ளார்.
இந்த இடத்திற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெரும் பொருளாதார கஷ்டத்தை எதிர்நோக்கி வரும் இந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.