இலங்கையை நல்ல நிலமைக்கு கொண்டுவந்த கோட்டாபயவுக்கு நன்றி - சிந்திக்க மட்டுமே -
இலங்கை என்றாலே அந்நாடு பிரச்சினைக்குரிய நாடாகவே மாறியிருக்கின்றது. ஆண்டுதோறும் தினமும் ஏதாவதொரு புதிய புதிய பிரச்சினைகள் முளைத்துவிடும். அதுபோலவே தற்போது, இலங்கையில் பாரிய பிரச்சினையாக தலைதூக்கி இருப்பது இன்றைய பொருளாதார பிரச்சினையே.
ஆம். இப்பிரச்சினையால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்பதை விட மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைதான் கிடைத்திருக்கின்றது என ஒரு முகநூல் நண்பர் தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதனை வாசித்துப்பார்க்கையில் மக்கள் மத்தியில் நிறைய சிந்தனைகள் தான் மேலோங்கும். இதோ அவரின் பதிவு...
1. எல்லோரும் கேஸ் அடுப்பு, fast food, restaurants களில் சாப்பாடு என்று சுகாதாரத்துக்கு கேடான முறையில் உணவு உண்டு கொண்டு இருந்த சமயம், கேஸ் இறக்குமதியைத் தடுத்து விறகுக் கொல்லி அடுப்பு முறையை அறிமுகப் படுத்தி சுகாதாரமான உணவு முறைகளை உண்ண வழி வகுத்துள்ளார். கேஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய கோட்டா சேருக்கு நன்றி...
2. ரொம்பச் சின்ன தூரம் என்றாலும் மோட்டார் சைக்கிளையோ, காரையோ எடுத்துக் கொண்டு போதல், தேவையில்லாமல் சுற்றுலாக்கள் சென்று பணத்தை வீணாக்குதல் போன்ற ஆடம்பர செலவீனங்களைக் கண்ட கோட்டா சேர், பெற்றோல், டீசல் தட்டுப்பாட்டைக் கொண்டு வந்து, வாகனங்களில் போய்க் கொண்டிருந்த மக்களை சைக்கிளிலும், நடையிலும் போக வைத்தவர். இதனால் மக்களின் கொழுப்புக் குறைந்து சுகாதார வழிமுறையுள்ள வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினர். இப்படியான திருப்பத்தை ஏற்படுத்தி வைக்க, பெற்றோல் டீசலுக்கு விலையேற்றி தட்டுப்பாட்டை ஏற்படுத்திய கோட்டா சேருக்கு நன்றி.
3. பால்மா... பால்மா என்றால் என்ன? கெமிக்கல். ஒரு வயதுக் குழந்தை தொடக்கம் 90 வயதுப் பாட்டி வரை இந்த கெமிக்கலைக் குடித்து வாழ்ந்து வந்த சமயம், ஆட்சிக்கு வந்த சேர்தான் மக்களை பசும்பால்/ ப்லேன்டி குடித்து ஆரோக்கிய வாழ்வுக்குத் திருப்ப யோசித்தார். இதனாலேயே இந்தப் பால்மா தட்டுப்பாடு. பால்மா தட்டுப்பாட்டை ஏற்படுத்திய கோட்டா சேருக்கு நன்றி.
4. சீனி அதிகம் உண்பதனால் சீனி நோய் வரும். எனவே சீனித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, இன்று பலர் சீனி இல்லாமல் இனிப்புக்களை உண்ண ஆரம்பித்து விட்டனர். குட்டி சிங்கப்பூரில் பலருக்கு சீனி நோய் குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வொன்று கூறுகிறதாம். இந்த ஆரோக்கிய நிலமையை ஏற்படுத்திய லீ குவான் யூ சேருக்கு நன்றி. அதேபோன்று சீனி விலையை இலங்கையிலும் அதிகரித்து மக்களை சீனி நோயிலிருந்து காப்பாற்றும் கோட்டா சேருக்கு நன்றி..
5. நாம் நிலாச் சோறு சாப்பிட்டு எத்தனை நாட்கள்? குடும்பம், குட்டியோடு இரவுவேளை வீட்டு முற்றத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ நிலாவை ரசித்த வண்ணம் சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாட்கள்? தனது சிறுவயதில் அனுபவித்த நல்ல அனுபவங்களை மீட்டிக் கொண்டு வரவே இன்று நாட்டில் ஏழரை மணி நேரம் மின்வெட்டு கொண்டு வந்து மக்களை மொட்டை மாடிகளிலும் வீட்டு முற்றத்திலும் நிலாச்சோறு சாப்பிட வைக்கிறார் சேர். அதுபோக கரண்ட் பில்லும் மிச்சம். இத்தனை அனுபவங்களை ஏற்படுத்தித் தந்த கோட்டா சேருக்கு கோடி நன்றி.
6. ஆளாளுக்கு முகங்களைப் பார்த்துக் கூட பேச நேரமில்லாத இந்த காலகட்டத்தில், செல்போனே வாழ்க்கை என்று சுற்றித்திரிந்த நம்மை மின் தடையை ஏற்படுத்தி, phone charger இல்லாமலாக்கி, ஆளாளுக்கு முகங்களைப் பார்த்துப் பேச, சக மனிதன் இன்னொரு மனிதனோடு பேச வைக்க வழிவகுத்த கோட்டா சேருக்கு நன்றி.
7. கெமிக்கல் பசளைகளைத் தடை செய்து, இயற்கையான உர வகைகளை அறிமுகம் செய்து இவ்வளவு காலமும் நஞ்சைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களை இயற்கையாக விளைந்த உணவு வகைகளைச் சாப்பிட வைக்க, சேதனப் பசளை முறைமையை ஆரம்பிக்க வைத்த கோட்டா சேருக்கு நன்றிகள்.
8. பனடோல், பரசிட்டமோல் என்று யூதக் கண்டு பிடிப்புக்களை சிறு காய்ச்சல் வந்தாலும் விழுங்கிக் கொள்ளும் நமக்கு அவற்றைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆச்சி காலத்து மருத்துவ முறைகளை எமக்கு அறிமுகப் படுத்திய லீ குவான் யூவுக்கு கோடி நன்றி. அதே போன்று நாட்டை பொருளாதார நிலைமைக்குள் தள்ளி கடனுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்நிலையில், இயற்கை முறைமைகளை அறிமுகப்படுத்தி மக்களை நீண்டகாலம் வாழவைக்க நினைக்கும் கோட்டா சேருக்கு நன்றி.
9. ஆளாளுக்கு நின்று பேசக்கூட நேரமில்லாத காலத்தில் கண்ட பொருட்களுக்கு எல்லாம் தட்டுப்பாட்டை வரவழைத்து போலின்களில் மக்களை நிற்க வைத்து ஆளாளுக்கு பேசிக் கொள்ளவும், போலின்களில் மக்கள் கூட்டத்தை ஏற்படுத்தி சந்தோசமாக ஆடிப்பாடி கொண்டாடிக் கொண்டிருக்கவும் வழி வகுத்த மஹதீர் மொஹம்மதுக்கு நன்றி.
10. ஆக மொத்தத்தில் துட்ட கைமுனு ஆட்சி, துட்ட கைமுனு ஆட்சி என்று வார்த்தைக்கு வார்த்தை கூறி விட்டு மக்களை ஏமாற்றாமல் கி.மு 150 களுக்கே நம்மை அழைத்துச் சென்று துட்ட கெமுனு ஆட்சி இலங்கையில் எப்படி இருந்தது என்று காட்டி ஒரு "දියුණුවෙන් දියුණු රටක්" හදපු தன்மான சிங்கம், புரட்சித் தலைவர் கோட்டா சேருக்கு கேடான கோடி நன்றி.
இப்படிக்கு,
கோட்டா சேரின் விழுதுகள்