டொலர் இல்லை: மூன்று தூதரகங்களை மூடுகிறது இலங்கை

Prathees
2 years ago
டொலர் இல்லை: மூன்று தூதரகங்களை மூடுகிறது இலங்கை

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இரண்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் ஒரு கொன்சல் ஜெனரல் அலுவலகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஈராக், பாக்தாத் மற்றும் நோர்வேயின் ஒஸ்லோ ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கொன்சல் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் திகதி முதல் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டே வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்மூலம், ஈராக்குடனான இலங்கை விவகாரங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் உள்ள கொன்சல் ஜெனரல் அலுவலகத்தின் ஊடாக நடத்தப்படும்.

 நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள தூதரகம் வழியாக தனது விவகாரங்களை மேற்கொள்ளும்.

கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிட்னி கொன்சல் ஜெனரல் அலுவலகத்தின் விவகாரங்களைக் கையாளும்.

வெளிநாடுகளில் 63 இலங்கை இராஜதந்திர தூதரகங்கள் இருப்பதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சு, 3 தூதரகங்கள் மூடப்பட்டதன் மூலம் மொத்த அலுவலகங்களின் எண்ணிக்கை 60 ஆக குறைந்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு இராஜதந்திர பணிகளைச் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.