சீன உரக்கப்பல் நிச்சயமாக இலங்கைக்கு மீண்டும் வரும் :இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச
சீன உரக் கப்பல் நிச்சயமாக இலங்கைக்கு மீண்டும் வரும் என கரிம உர உற்பத்திஇ ஊக்குவிப்பு மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த முறை அந்த உரக் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
சீன நிறுவனத்தின் சிபாரிசுகளுக்கு அமைவாக உலகப் புகழ்பெற்ற ஆய்வுகூடம் மற்றும் இலங்கையின் ஆய்வுகூடம் ஆகியவற்றில் பரிசோதனைகளை மேற்கொண்டு இந்த உரம் இறக்குமதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இலங்கை ஆய்வகங்களில் உள்ள உரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாவிட்டால், உரங்களை இறக்குமதி செய்ய மாட்டோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உரத்தை முன்பிருந்த விலைக்கே திருப்பித் தருவதற்கு நிறுவனம் இணங்கியுள்ளதாகவும், அது இலங்கைக்கு பாரிய இலாபத்தை பெற்றுத் தரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை திட உரத்தில் கவனம் செலுத்தாமல் ஆரம்பத்தில் இடக்கூடிய திரவ உரங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது என ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
26 நாட்களுக்குள் உரம் இறக்குமதி செய்யப்படும் என விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.